கொரோனா தடுப்பு நடவடிக்கை: 31-ந் தேதி வரை அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ரத்து - மின்சார ரெயில்களும் இயங்காது
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 31-ந்தேதி வரை அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
மும்பை,
இந்தியாவில் கொரோனா வைரஸ் ரெயில்களில் பயணம் செய்வதன் மூலமாக அதிகளவில் பரவுவதால், பொது மக்கள் ரெயில் போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும் நேற்று நாடு முழுவதும் அனைத்து ரெயில்களையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த ரெயில்கள் ரத்து வரும் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று மீண்டும் இந்தியன் ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
இதுகுறித்து மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வருகிற 31-ந் தேதி நள்ளிரவு வரை பயணிகள், மெயில், எக்ஸ்பிரஸ், பிரீமியம் மற்றும் புறநகர் மின்சார ரெயில்கள் என அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது. ரெயில் சேவைகள் அனைத்தும் நேற்று (22-ந் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வகையில் சரக்கு ரெயில் சேவைகள் மட்டும் தொடர்ந்து நடைபெறும். ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு பணமும் திரும்பி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story