மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு கடைபிடிப்பு; கடைகள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின + "||" + Curfew in Karur district; shops closed

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு கடைபிடிப்பு; கடைகள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு கடைபிடிப்பு; கடைகள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவையொட்டி கடைகள் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கரூர், 

சீனாவின் வூகான் மாநிலத்தில் உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் சினிமா திரையரங்குகள், திருமண மண்டபங்கள், விளையாட்டு அரங்குகள், அனைத்து மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை வருகிற 31-ந்தேதி வரை மூடிட வேண்டும் என அரசு கேட்டு கொண்டதன்பேரில் அவைகள் ஏற்கனவே மூடப்பட்டு விட்டன.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்களை ஒன்றுகூட விடாமல் தனிமைப்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்பதன் அடிப்படையில் மார்ச் 22-ந்தேதி மக்கள் ஊரடங்கினை கடைபிடிக்ககோரி பிரதமர் மோடி அறிவித்தார். அந்த வகையில் இந்தியா முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதையொட்டி கரூர் மண்டலத்துக்குட்பட்ட திருமாநிலையூரில் உள்ள கரூர் கிளை 1, 2 பணிமனைகளில் அனைத்து நகர்ப்புற, புறநகர், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் அனைத்து நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் வெளியூர்களில் இருந்து அதிகாலையில் கரூர் வந்திருந்த சில பயணிகள் அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் தவித்தனர். 

பின்னர் உறவினர்களின் வாகனத்தை எடுத்து வர சொல்லி அதில் ஏறி தங்களது வீடுகளுக்கு சென்றனர். பஸ் போக்குவரத்து இல்லாதததால் கரூர் பஸ் நிலையம் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் கரூர் வழியாக செல்கிற 26 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும் கரூரில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்லக்கூடிய பயணிகள் ரெயிலானது, கரூர் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. வெளி நபர்கள் யாரும் கரூர் ரெயில் நிலையத்திற்குள் வந்து விடாதபடி ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

டிக்கெட் வினியோகிக்கும் இடம், அதிகாரிகள் அலுவலகம், தகவல் மையம் ஆகியவை பூட்டப்பட்டிருந்தன. இதனால் கரூர் ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டன. கரூரில் பஸ், ரெயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை கையாளப்பட்டது.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்கிற போதிலும் கரூர் மினிபஸ் நிலையத்தின்பின்புறம், ஜவகர்பஜார், பசுபதிபாளையம், காந்திகிராமம், தாந்தோணிமலை உள்ளிட்ட இடங்களில் இறைச்சி கடைகள் அனைத்தும் திறக்கப்படவில்லை. மாறாக கரூர் ராயனூர், நொய்யல், கிருஷ்ணராயபுரம், தரகம்பட்டி, லாலாபேட்டை பகுதிகளில் சில இறைச்சி கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அதிலும் ஆட்டிறைச்சியை மக்கள் விரும்பி வாங்கி சென்றதை காண முடிந்தது. 

மேலும் கரூர் ஜவகர்பஜார், பழையபைபாஸ்ரோடு, கோவைரோடு, பெரியார் வளைவு, சுக்காலியூர், சுங்ககேட், வெங்கமேடு, மண்மங்கலம், லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி, தென்னிலை, சின்னதாராபுரம், நொய்யல், வேலாயுதம்பாளையம், தரகம்பட்டி, அரவக்குறிச்சி, தோகைமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகை, ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்டிக்கடை, டீக்கடை, இனிப்பகங்கள் உள்ளிட்டவை பூட்டப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய வீதிகள், சாலைகள் வெறிச்சோடின. கரூர் உழவர் சந்தை, காந்திமார்க்கெட், கிருஷ்ணராயபுரம், தோகைமலை ஆகிய பகுதிகளில் சந்தைகள் உள்ளிட்டவையும் பூட்டப்பட்டிருந்ததால், சிலர் காய்கறிகள் வாங்குவதற்காக கிராமப்புற கடைகளை தேடி அலைந்தனர்.

மேலும் கரூர் உழவர் சந்தை அருகேயுள்ள அம்மா உணவகம் உள்ளிட்டவையும் பூட்டப்பட்டிருந்ததால், சாப்பிட உணவு வாங்க சிலர் அலைந்து திரிந்தனர். எனினும் சில வீடுகளில் உணவு சமைத்து விற்கப்பட்டதால் அதனை ஆர்வத்துடன் வாங்கி பசியை ஆற்றி கொண்டனர். கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையில் போலீசார் கரூர் மனோகரா கார்னர் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு ரோந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சில கடைகள் திறந்திருந்ததை கண்டதும் அதனை மூட சொல்லி நடவடிக்கை எடுத்தனர். மேலும் மெயின்ரோடுகளில் கூட்டமாக நின்றவர்களை வீடுகளுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினார்கள். இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் தங்களது தெருக்களிலேயே கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்ததை காண முடிந்தது. எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசலுடன் இருக்கும் கரூர் வெங்கமேடு, தோரணக்கல்பட்டி, வெங்கக்கல்பட்டி, திருக்காம்புலியூர் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் உள்ள மேம்பாலங்கள் வெறிச்சோடி இருந்தன.

எனினும் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் திறந்து இருந்ததால் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வதில் எவ்வித இடர்பாடும் ஏற்படவில்லை. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையம் உள்ளிட்டவை திறந்திருந்ததால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. 

மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களும் திறந்திருந்து இருந்தது. மேலும் கரூர் டவுன் உள்பட மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களும் வழக்கம் போல் இயங்கின. அங்கு வழக்கு விசாரணை உள்ளிட்டவற்றுக்காக வந்தவர்கள் கைகளை சோப்பு போட்டு கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் போலீஸ் நிலையங்களுக்கு போலீசார் முக கவசம் அணிந்தவாறே பணி செய்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்தன. வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காகித ஆலையும் மூடப் பட்டிருந்தது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் கள்ள மார்க்கெட்டில் சட்டவிரோத மதுபான விற்பனை நடக்கிறதா? என மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மற்றும் அதிகாரிகள் ரோந்து சென்று கண்காணித்தனர். மேலும் வீடின்றி சாலையோரம் உள்ளிட்ட இடங்களில் வசித்து வந்தவர்களுக்கு, சிலர் தாமாகவே முன்வந்து மனிதாபிமானத்துடன் உணவு பொட்டலங்களை வழங்கியதை காண முடிந்தது. 

மேலும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மொத்தத்தில் கொரோனா வைரஸ் என்கிற கண்ணுக்கு தெரியாத கிருமியை விரட்டி அடிக்க கரூர் மாவட்ட மக்கள் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு நல்கி வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.

குளித்தலை பகுதியில் நேற்று பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சி விற்கும் கடைகள் மட்டும் நேற்று அதிகாலையில் திறக்கப்பட்டிருந்தன. சில மணிநேரம் திறந்திருந்த அந்த கடைகளும் பின்னர் மூடப்பட்டன. அதேபோல சில டீ மற்றும் பெட்டிக்கடைகள் காலையில் சிறிதுநேரம் திறக்கப்பட்டு பின்னர் பூட்டப்பட்டன. ஆங்காங்கே மருந்து கடைகள் மட்டும் முழுவதும் திறந்திருந்தன. 

குளித்தலையை பொறுத்தவரை 99 சதவீதம் கடைகள் பூட்டப்பட்டிருந்தன. குளித்தலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் அனைத்து பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு சில ஆட்டோக்கள் அவசர தேவைக்கு இயக்குவதற்காக பஸ்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதேபோல குளித்தலை வழியாக ரெயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. மேலும் நேற்று ஒருநாள் மட்டும் காலை 6 மணி முதல், இரவு 10 மணிவரை குளித்தலை ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மூடப்படுவதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் இல்லாமல் ரெயில் நிலையம் வெறிச்சோடி இருந்தது. 

குளித்தலை பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் சிலவற்றில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்த திருமணங்கள் மட்டும் நடத்தப்பட்டன. அதிலும் குறைவான எண்ணிக்கையிலேயே திருமண வீட்டாரின் உறவினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒரு சிலர் தங்கள் தேவைக்காக மட்டும் வெளியே சென்று வந்தனர். அதனால் குளித்தலையில் மக்கள் நடமாட்டம் இன்றி குளித்தலை நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.