கொரோனா வைரசின் தாக்கம்: சுய ஊரடங்கு உத்தரவால் மாவட்டம் வெறிச்சோடியது
கொரோனா வைரசின் தாக்கத்தை தொடர்ந்து நேற்று சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் வெறிச்சோடியது. பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தனர்.
புதுக்கோட்டை,
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மேலும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றது. இந்த வைரசில் இருந்து பொதுமக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
குறிப்பாக இந்த வைரஸ் காற்றின் மூலமும் ஒருவருக்கொருவர் பரவும் என்பதால், பொதுமக்கள் அதிக கூட்டம் உள்ள இடத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தன் சுத்தம் அவசியம் என்பதை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் கிராமங்களில் உள்ள கடைகளில் கூட வாடிக்கையாளர்கள் கை கழுவ சோப்பு, தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மஞ்சள் தண்ணீர் வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் அதிக கூட்டம் இருக்கும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்தையும் வருகிற 31-ந் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் முக்கிய கோவில்களில் நடக்கும் திருவிழாக்கள் உள்ளிட்டவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதேபோல சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி பொதுமக்களிடம் பேசுகையில், அனைவரும் கொரோனா வைரசில் இருந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கைகளை கழுவ வேண்டும். மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வந்தன. பின்னர் நேற்று காலையில் இருந்து முற்றிலும் பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் போக்குவரத்து கழக பணிமனையிலேயே நிறுத்தப்பட்டு உள்ளன.
இதேபோல தனியார் லாரிகள், வேன்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களும் நேற்று இயக்கப்படவில்லை. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் டீக்கடைகள், இறைச்சி கடைகள், மருந்து கடைகள் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் போன்றவை திறந்து இருந்தன.
இதன் காரணமாக புதுக்கோட்டையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பூ மார்க்கெட், உழவர் சந்தை, கீழராஜவீதி, மேலராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மீன்மார்க்கெட் போன்றவை வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. புதுக்கோட்டை நகரில் செயல்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் மருந்து கடைகளுக்கு யாரும் வராததால், அவைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
சுய ஊரடங்கு உத்தரவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே பொதுமக்கள் இருந்தனர். சிலர் தங்களது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பாரம்பரிய விளையாட்டுகளான தாயம், கேரம், செஸ் போன்ற பல்வேறு விளையாட்டுகளை விளையாடியும், அவர்களுக்கு நீதி கதைகளை கூறியும் நேரத்தை கழித்தனர். இருப்பினும் சிலர் புதுக்கோட்டை நகர் வெறிச்சோடி காண்பதை தனது செல்போனில் படம் எடுத்துக்கொண்டே நகரை சுற்றி வந்து கொண்டிருந்தனர். இதேபோல மாவட்டத்தில் சில இடங்களில் முக்கியமாக உறவினர்கள் முன்னிலையில் காதுகுத்து, திருமணம், நிச்சயத்தார்த்தம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதேபோல அன்னவாசல், இலுப்பூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி கிடந்தன. பெட்ரோல் விற்பனை நிலையம் திறந்திருந்தன. அங்கும் கூட்டங்கள் இல்லை. ஒரு சிலரே பெட்ரோல் நிரப்ப வந்தனர். ஒரு சில மருந்துகடைகள், சிற்றுண்டிகள் மட்டுமே திறந்து இருந்தது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். இந்நிலையில், அன்னவாசலில் உள்ள 3 திருமண மண்டபங்களில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் திருமணம் மற்றும் காதணி விழா நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று ஊரடங்கு காரணமாக, உறவினர்கள் யாரும் சரிவர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. முக்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்தவர்கள் கைசுத்தம் செய்வதற்காக மண்டப வாசலில் தண்ணீர், சோப்பு போன்றவைகள் வைக்கப்பட்டு இருந்தன. மக்கள் ஊரடங்குக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற திருமணம்- காதணி விழா, ஏற்பாட்டாளர்களுக்கு வித்தியாசமான நிகழ்வாக அமைந்தது.
இதேபோல திருவரங்குளம் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள், ஆலங்குடி, வடகாடு, புள்ளான்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் சுயஊரடங்கு உத்தரவை முன்னிட்டு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். மேலும் ஆலங்குடியில் நடைபெற இருந்த அ.தி.மு.க. பிரமுகர் இல்ல காதணி விழாவும், மேல நெம்மக்கோட்டையில் நடைபெற இருந்த காதணி விழாவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் ஆலங்குடியில் ஒரு திருமணம் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரின் முன்னிலையில் அதிகாலை 5 மணியளவில் நடைபெற்றது.
இதேபோல திருமயம், அரிமளம், மணமேல்குடி, ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, விராலிமலை, கீரனூர், பொன்னமராவதி, காரையூர், அண்டக்குளம், கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, ஆவூர், கோட்டைப்பட்டினம், மீமிசல், ஜெகதாப்பட்டினம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், வேன்கள், சரக்கு வாகனங்கள் போன்றவை இயக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையம் மற்றும் முக்கிய கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
கீரமங்கலம் மற்றும் கொத்தமங்கலம், குளமங்கலம், மேற்பனைக்காடு, பனங்குளம் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது. கீரமங்கலத்தில் மிகப் பெரிய பூ கமிஷன் கடைகளும் முதல் முறையாக அடைக்கப்பட்டு இருந்தது.
அதாவது ஒரு நாளைக்கு சுமார் 5 முதல் 10 டன் வரை மலர்கள் விற்பனை செய்யப்படும் பூ கமிஷன் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. இதே போல கொத்தமங்கலத்திலும் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான திருமணங்கள், திருமண நிச்சயத்தார்த்தங்களில் மிகக் குறைவான உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில் நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story