கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு: மாவட்டத்தில் பஸ்கள், வாகனங்கள் ஓடவில்லை


ஓசூர் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கும் காட்சி.
x
ஓசூர் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கும் காட்சி.
தினத்தந்தி 23 March 2020 12:55 PM IST (Updated: 23 March 2020 12:55 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் ஊரடங்கு நேற்று நடந்ததையொட்டி கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் பஸ்கள், வாகனங்கள் ஓடவில்லை. கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடின.

கிரு‌‌ஷ்ணகிரி, 

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. இந்த வைரசால் உலகம் முழுவதும் 11 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானார்கள். 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று வரையில் 370-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் இறந்துள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் மேலும் பரவாமல் இருப்பதற்காக பிரதமர் மோடி நேற்று மக்கள் ஊரடங்கு நடத்த வேண்டும் என்றும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கூறினார். மேலும் தமிழக முதல்-அமைச்சரும் இந்த ஊரடங்குக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்படி நேற்றைய தினம் ஊரடங்கு நடந்தது.

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதலே வாகனங்களின் இயக்கம் படிப்படியாக குறைந்தது. நேற்று காலை 7 மணி முதல் பஸ்கள் முழுமையாக ஓடவில்லை. அரசு, தனியார் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆட்டோக்கள், கார்கள் என எந்த வாகனங்களும் இயங்கவில்லை.

அதே போல கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ள சென்னை சாலை, ஓசூர், பெங்களூரு சாலை, சேலம் சாலை என அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் பிரதமரின் மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து நேற்று காலை முதல் வீட்டிலேயே இருந்தனர். வீடுகளில் குடும்பத்தினருடன் அவர்கள் நேரத்தை செலவிட்டனர். மேலும் டி.வி.க்களில் செய்திகளை பார்த்தவாறு இருந்தார்கள்.

கிரு‌‌ஷ்ணகிரி நகரில் நாள் தோறும் காலை வேலையில் காய்கறி சந்தை நடைபெறும். மாவட்டத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாய விளைப் பொருட்களை இந்த சந்தையில் நேரடியாக மொத்தம் மற்றும் சில்லறை விலையில் விற்பனை செய்வார்கள். அந்த பொருட்களை சுற்று பகுதியில் உள்ளவர்கள் வாங்கி சென்று சில்லறை விற்பனையில் ஈடுபடுவார்கள். நாள் தோறும் காலை 4 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் இந்த சந்தையில் பல ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கூடுவார்கள்.

இந்த நிலையில் நேற்று சந்தை மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கிராமங்களில் இருந்து விவசாயிகள் யாரும் தங்களது விவசாய பொருட்களை சந்தைபடுத்த வரவில்லை. அதே போல் வியாபாரிகளும் பொருட்களை வாங்க வரவில்லை. இதனால் முதல் முறையாக ஆள் நடமாட்டம் இல்லாமல், சந்தை நடைபெறாமல் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கிரு‌‌ஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள உழவர் சந்தை மூடப்பட்டிருந்தது.

கிரு‌‌ஷ்ணகிரி நகரில் பழையபேட்டை மீன் மார்க்கெட், புதுபேட்டை கறிக்கடைகளில் அதிகாலை 3 மணி முதலே ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனையானது. கிரு‌‌ஷ்ணகிரி பழையபேட்டை மீன் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. காலை 7 மணியை தொடர்ந்தும் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் சில இறைச்சி கடைக்காரர்கள் கடைகளை திறந்து வைத்திருந்தனர்.

அவர்களை போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து கடைகளை பூட்டி விட்டு சென்றனர். மாவட்டத்தில் அனைவரும் கடைகளை மூட ஒத்துழைப்பு தந்த போதிலும் இறைச்சி கடைக்காரர்கள் பலர் ஒத்துழைப்பு தராமல் கடைகளை திறந்து வைத்திருந்ததாக சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் கிரு‌‌ஷ்ணகிரி நகரையொட்டி சுங்கச்சாவடி உள்ளது. இந்த வழியாக நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும். நேற்று மக்கள் ஊரடங்கு காரணமாகவும், கர்நாடகாவிற்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதாலும் சுங்கச்சாவடி வழியாக எந்த வாகனங்களும் செல்லவில்லை.

ஓசூரில் மக்கள் ஊரடங்கு காரணமாக எந்த வாகனங்களும் இயங்கவில்லை. ஓசூர் பஸ் நிலையம் எந்த வாகனங்களும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் வாகனங்கள் செல்லாத வகையில் எல்லைப்பகுதி தடுப்பு கம்பிகளால் மூடப்பட்டது. ஓசூரில் நேதாஜி சாலை, காந்தி சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, ராயக்கோட்டை சாலை என அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஓசூரில் 100 சதவீதம் வாகனங்கள் ஓடவில்லை. மக்களும் வீட்டிலேயே இருந்தனர். இதே போல ஓசூரை சுற்றி உள்ள மத்திகிரி, சூளகிரி, பாகலூர், பேரிகை உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் ஊரடங்கு 100 சதவீதம் முழுமையாக நடந்தது.

மேலும், ராயக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி பகுதிகளிலும் 100 சதவீதம் கடைகள் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் இயங்கவில்லை. தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி பகுதியிலும் மக்கள் வீட்டிலேயே இருந்து பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.

போச்சம்பள்ளியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரமாண்ட சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் குண்டூசி முதல் தங்கம் வரையில் வியாபாரம் நடைபெறும். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம். ஆடு, மாடு வியாபாரிகள், தானிய வியாபாரிகள் என அனைத்து தரப்பு வியாபாரிகளும் வருவது வழக்கம். இந்த முறை பிரதமரின் அறிவிப்பு காரணமாக மக்கள் ஊரடங்கு நடந்ததால் போச்சம்பள்ளியில் நேற்று சந்தை நடைபெறவில்லை. இதனால் ரூ.50 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இதே போல ஊத்தங்கரை, கல்லாவி, வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி, பர்கூர், மத்தூர், நாகரசம்பட்டி, காவேரிப்பட்டணம் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் வாகனங்கள் ஓடவில்லை. கடைகள் மூடப்பட்டிருந்தன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் முழு ஆதரவு கொடுத்தனர். 


Next Story