நெல்லையில் பட்டப்பகலில் மனைவி கண் முன்னே பயங்கரம்: கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்த தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
நெல்லையில் பட்டப்பகலில் கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்த தொழிலாளியை அவரது மனைவி-மகன் கண் முன்னே 4 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
நெல்லை,
நெல்லை அருகே உள்ள பாலாமடை இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 29). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பிச்சம்மாள் (வயது 25). இவர்களுக்கு சுவேதா (7) என்ற மகளும், வலதி என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 18-11-2018 அன்று பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்த பால்துரை (20) என்பவர் பாலாமடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகானந்தம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், தினந்தோறும் நெல்லை கோர்ட்டுக்கு சென்று கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் முருகானந்தம் வழக்கம்போல் நெல்லை கோர்ட்டுக்கு சென்று கையெழுத்திடுவதற்காக மொபட்டில் புறப்பட்டார். அப்போது அவருடைய மனைவி பிச்சம்மாள் தனக்கு பல் வலி இருப்பதால், ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து முருகானந்தம் தன்னுடைய மனைவி பிச்சம்மாள், மகன் வலதி ஆகியோரை மொபட்டில் அழைத்து கொண்டு நெல்லை கோர்ட்டுக்கு சென்றார்.
அங்கு அவர் கையெழுத்திட்டு விட்டு, மொபட்டில் மனைவி, மகனுடன் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள பிச்சிவன சாலை வழியாக சென்றபோது, அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை மொபட்டின் மீது மோத விட்டனர்.
இதனால் நிலைதடுமாறிய முருகானந்தம், மனைவி, மகனுடன் மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். உடனே மோட்டார் சைக்கிள்களில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 4 மர்மநபர்களும் இறங்கி வந்தனர். அவர்களைப் பார்த்ததும், முருகானந்தம் சுதாரித்து கொண்டு தப்பியோட முயன்றார். ஆனாலும் அந்த நபர்கள், முருகானந்தத்தை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி, மகன் கண்முன்னே முருகானந்தத்தை வெட்டிக் கொலை செய்த 4 மர்மநபர்களும் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றனர்.
இறந்த முருகானந்தத்தின் உடலைப் பார்த்து மனைவி, மகன் கதறி அழுதனர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், கோர்ட்டுக்கு சென்று வந்த தொழிலாளி, வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் பெரியசாமி, பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட முருகானந்தத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், கடந்த 2018-ம் ஆண்டு பால்துரை கொலை செய்யப்பட்ட வழக்கில், முருகானந்தம் கைது செய்யப்பட்டார். எனவே, முருகானந்தத்தை கொலை செய்ய வேண்டும் என்று எதிர் தரப்பினர் தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
இதற்கிடையே, ஜாமீனில் வெளியே வந்த முருகானந்தம், நெல்லை கோர்ட்டுக்கு சென்று தினமும் கையெழுத்திடுவதை அறிந்து, அவரை தீர்த்துக்கட்ட எதிர் தரப்பினர் திட்டம் தீட்டினர். இதனை அறிந்த முருகானந்தம், கோர்ட்டில் கையெழுத்திடாமல் தலைமறைவானார். இதையடுத்து கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.தொடர்ந்து முருகானந்தம், நெல்லை கோர்ட் டில் கையெழுத்திட்டு வந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், முருகானந்தத்தை பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க, பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார், கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி, பல்வேறு இடங்களிலும் சென்று வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story