கொரோனா எச்சரிக்கை எதிரொலி: முக கவசம் அணிவதில் மக்களிடம் விழிப்புணர்வு
ராமநாதபுரத்தில் கொரோனா விழிப்புணர்வு காரணமாக பொதுமக்கள் துணிகள் மூலம் முக கவசமணிந்து வந்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா எச்சரிக்கை எதிரொலியாக காலையில் திறக்கப்பட்ட கடைகள் மீண்டும் மாலையில் அடைக்கப்பட்டன. மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக முக கவசம் அணிந்து வெளியில் வந்தனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதும் இதனால் பலர் பலியாகி வருவதும் தெரிந்ததே. இந்த நிலையில் முக கவசம் அணியாமல் வெளியில் நடமாடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஊரடங்கு முடிவடைந்த பின்பு நேற்று காலை வழக்கம்போல இயல்பு வாழ்க்கை தொடங்கியது.
காலை முதலே அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. சிறியவர் முதல் பெரியவர் வரை வெளியில் இயல்பாக வரத்தொடங்கி தங்களின் இயல்பு வாழ்க்கையை தொடங்கினர். என்னதான் வழக்கம் போல நடமாடினாலும் மக்களின் முகத்தில் ஒருவித அச்சம் இருந்தது. தெருக்களில் 20 சதவீதத்திற்கு குறைவாக மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.
கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத்துறை மூலம் ஏற்படுத்திய விழிப்புணர்வு மக்களிடம் சென்றடைந்ததை காணமுடிந்தது. ஏனெனில் மாவட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை முக கவசம் அணிந்து வெளியில் வந்தனர். முக கவசம் வாங்க முடியாதவர்கள், கிடைக்காதவர்கள் தங்களின் கைக்குட்டை, சிறுதுண்டுகளை கொண்டு முக கவசம் அணிந்து வெளியில் வந்தனர்.
மாவட்டத்தில் நேற்று காலை வழக்கம்போல கடைகள் அனைத்தும் திறந்து செயல்பட்டன. இந்த நிலையில் அரசின் உத்தரவின்படி உணவு, பால், காய்கறி, உணவுபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் அரசின் உத்தரவினை மீறி திறக்கப்படும் கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அத்தியாவசிய கடைகள் அனைத்தும் திறந்திருந்ததால் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
தொடர்ந்து அடுத்தடுத்து தீவிரமாக முன்எச்சரிக்கை நடவடிக்கை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் நிலைமை இன்னும் மோசமாக மாறிவிடும் என்று அச்சப்பட்ட மக்கள் தங்களின் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க தொடங்கினர். இதன்காரணமாக கடைகளில் மக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. நகரசபை மற்றும் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஆட்டோக்களில் கொரோனா எச்சரிக்கை குறித்தும், கைகழுவுதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு அத்தியாவசிய கடைகள் தவிர இதர கடைகளை உடனடியாக அடைக்க ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story