கொரோனா வைரஸ் எதிரொலி மாவட்டத்தில் குறைவான பஸ்கள் இயக்கம்


கொரோனா வைரஸ் எதிரொலி மாவட்டத்தில் குறைவான பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 23 March 2020 10:00 PM GMT (Updated: 23 March 2020 8:53 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நேற்று திறக்க வேண்டிய கணேசபுரம் வாரச்சந்தை மூடப்பட்டது.

சிவகங்கை, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் குறைவான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மேலும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்கள் திறக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு பஸ்கள், ரெயில்கள் உள்ளிட்ட போக்குவரத்து முடக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணி வரை மக்கள் ஊரடங்கு நீடித்தது. அதன் பின்னர் சிறிய கடைகள் திறக்கப்பட்டன. சிறிய ஓட்டல்கள், மெடிக்கல், மளிகை கடை உள்ளிட்டவைகளும் நேற்று காலை வழக்கம் போல் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலை காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, தேவகோட்டை, காளையார்கோவில், சிங்கம்புணரி உள்ளிட்ட பஸ் நிலையங்களில் குறைந்த அளவிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இதுதவிர பல்வேறு இடங்களில் உள்ள பெரிய ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை திறக்கப்படவில்லை. மேலும் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களுக்கு பல்வேறு வழக்குகளுக்காக வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நேற்று தீர்வு காண வேண்டிய வழக்குகள் மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. இதுதவிர நகரில் மக்கள் நடமாட்டம் மந்தமான நிலையில் காணப்பட்டது. இது தவிர பேரூராட்சிகள், நகராட்சி ஆகியவை சார்பில் தூய்மை பணியாளர்கள் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். காரைக்குடி உள்ளிட்ட பகுதியில் நேற்று திறக்க வேண்டிய வாரச்சந்தைகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்தன. இதனால் சந்தைக்கு காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் பொதுமக்கள் ஒருவார காலத்திற்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்க கடைகளுக்கு வந்தனர். இந்த மக்கள் ஊரடங்கு இன்னும் ஒருவார காலம் மீண்டும் அமல்படுத்தப்படும் என நேற்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளியூர்களில் இருந்து திரும்பிய பல்வேறு ஊழியர்கள் நேற்று மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.

Next Story