பழனி அருகே யானை மிதித்து முதியவர் பலி உடலை டோலி கட்டி தூக்கி வந்த பரிதாபம்


பழனி அருகே யானை மிதித்து முதியவர் பலி உடலை டோலி கட்டி தூக்கி வந்த பரிதாபம்
x
தினத்தந்தி 23 March 2020 11:00 PM GMT (Updated: 23 March 2020 9:25 PM GMT)

பழனி அருகே முதியவரை யானை மிதித்து கொன்றது. அவரது உடலை டோலி கட்டி வனத்துறையினர் தூக்கி வந்தனர்.

பழனி,

பழனியை அடுத்த புதுஆயக் குடி 9-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 70). இவர் நேற்று காலை, அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (55) என்பவருடன் வரதமாநதி அணை அருகே அண்ணாத்துரை காடு வனப்பகுதியில் ஈச்சமார் சேகரிக்க சென்றதாக கூறப்படுகிறது. அங்கு இருவரும் ஈச்சமார் சேகரித்து கொண்டிருந்தபோது, யானை ஒன்று அங்கு வந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால் பொன்னுசாமி ஓட முடியாமல் யானையிடம் சிக்கி கொண்டார். அதையடுத்து யானை அவரை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அங்கிருந்து தப்பி அடிவார பகுதிக்கு வந்த சக்திவேல் உடனடியாக ஆயக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் ஒட்டன்சத்திரம், பழனி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பொன்னுசாமியின் உடலை கைப்பற்றினர். பின்னர் அவரின் உடலை டோலி கட்டி வனப்பகுதியில் இருந்து அடிவாரத்தில் உள்ள வரதாப்பட்டினம் பகுதிக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே ஆயக்குடி போலீசார் வரதாப்பட்டினம் சென்று பொன்னுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story