உசிலம்பட்டி அருகே போலீசுக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட பெண் குழந்தை உடல் தோண்டி எடுப்பு


உசிலம்பட்டி அருகே போலீசுக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட பெண் குழந்தை உடல் தோண்டி எடுப்பு
x
தினத்தந்தி 23 March 2020 10:45 PM GMT (Updated: 23 March 2020 10:33 PM GMT)

உசிலம்பட்டி அருகே போலீசுக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட பெண் குழந்தை உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது சேடபட்டி. இந்த ஊரைச்சேர்ந்த முத்துப்பாண்டி-சூரியபிரபா தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. பிறந்த 10 நாட்களில் அந்த குழந்தை இறந்து விட்டதாகக்கூறி குழந்தையின் உடலை வீட்டின் அருகே புதைத்து விட்டனர்.

கிராம செவிலியர் தடுப்பூசி போட சென்றபோது இந்த உண்மை தெரியவந்தது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தையின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேரையூர் தாசில்தார் சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா, தடயவியல் நிபுணர் பெருமாள், சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயா, மகளிர் ஊர்நல அலுவலர் தனலட்சுமி ஆகியோர் அங்கு சென்றனர்.

புதைக்கப்பட்ட பெண் குழந்தையின் உடல் இவர்களது முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. அதே இடத்தில் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் மணிகண்டன், முனியப்பன்ஆகியோர் தலைமையிலான குழுவினர் குழந்தையின் உடலை பரிசோதனை செய்தனர்.அப்போது பேரையூர் மண்டல துணை தாசில்தார் முகிபாலன், வருவாய் அலுவலர் வனராஜா, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரதாஸ் ஆகியோர் உடன் இருந் தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் குழந்தை நோய்வாய்ப்பட்டு இறந்ததா அல்லது பெண் சிசுக்கொலை செய்யப்பட்டதா என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story