கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வெறிச்சோடியது நோயாளிகள் தாமாக முன்வந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி சென்றனர்


கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வெறிச்சோடியது நோயாளிகள் தாமாக முன்வந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி சென்றனர்
x
தினத்தந்தி 24 March 2020 5:30 AM IST (Updated: 24 March 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள் தாமாகவே முன்வந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி சென்றதால் மருத்துவமனை வெறிச்சோடி காணப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதே போல் மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதற்காக இன்று மாலை 6 மணி முதல் வருகிற 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்டந்தோறும் அரசு தலைமை மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் படுக்கை வசதி, வென்டிலேட்டர் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் கொரோனா நோயாளிகளுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த சிறப்பு வார்டில் போதுமான வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருக்கிறதா? என மாவட்ட கலெக்டர் கிரண்குராலா ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் கொரோனா நோய் பாதித்தவர்கள் சிகிச்சை பெற வந்தால், தங்களுக்கும் நோய் வந்து விடுமோ? என்ற அச்சத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருந்த உள்நோயாளிகள் தாமாக முன்வந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்கின்றனர். பிரசவ வார்டில் பச்சிளங்குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களில் 80 சதவீதம் பேர் தாங்கள் நல்ல நிலையில் உள்ளதால் வீட்டிற்கு செல்வதாக தாமாக முன்வந்து கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களை டாக்டர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்தனர். இதன்பிறகு அவர்கள் இலவச தாய் சேய் வாகனம் மூலம் வீடுகளுக்கு சென்றனர்.

வெறிச்சோடியது

அதேபோல் மற்ற வார்டுகளில் உள்ள உள்நோயாளிகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து உடல் நிலை சீரடைந்து விட்டதாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்களும் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வீட்டுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அதேபோல் மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். மற்றவர்கள் பெரும்பாலும் மருத்துவமனைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் டேங்கர் லாரி மூலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்கள், கதவுகள், முகப்பு பகுதிகள், தரை பகுதிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story