144 தடை உத்தரவை மீறி பொது இடங்களில் சுற்றி திரிந்தால் நடவடிக்கை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் எச்சரிக்கை
தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பொதுஇடங்களில் தேவையின்றி சுற்றி திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவில்,
தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் பொதுஇடங்களில் தேவையின்றி சுற்றி திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
144 தடை உத்தரவு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு வருகிற 1–ந் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும். இதனால் பஸ், கார், ஆட்டோக்கள் ஓடாது. அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ஓட்டல்கள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் நேற்று நாகர்கோவில் நகரில் பெரும்பாலான மளிகை கடைகள், ஓட்டல்கள் போன்றவை மூடப்பட்டு இருந்தன. சில கடைகளில் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க அடைக்கப்பட்டுள்ளது என்ற வாசகங்கள் அடங்கிய பேனர் கட்டப்பட்டு இருந்தது.
சட்டப்படி நடவடிக்கை
144 தடை உத்தரவு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பஸ், கார், ஆட்டோக்கள் போன்றவை ஓடாது. அரசு அறிவித்தபடி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும். பெட்ரோல் பங்குகள் திறந்திருக்கும். ஓட்டல்களில் உணவுகளை பார்சல் வாங்கிச் செல்லலாம். ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடக்கூடாது.
பொது இடங்களில் வெளியில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. தேவையின்றி சுற்றி திரிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வந்து செல்லலாம். வெளிநாடுகளில் வந்து, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் வரவே கூடாது. அதைமீறி வந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.
Related Tags :
Next Story