144 தடை உத்தரவு எதிரொலி மாவட்ட எல்லைகளில் போலீசார் வாகன சோதனை
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கோவில்பட்டி,
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி மாவட்ட எல்லைகளில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
கடைகள் அடைப்பு
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாக பரவி, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையிலும், மக்கள் கூடுவதை தடை செய்யும் வகையிலும் நேற்று மாலையில் இருந்து வருகிற 31–ந்தேதி வரையிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதையொட்டி கோவில்பட்டியில் மாலையில் டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. திறந்து இருந்த சில ஓட்டல்களில் பார்சல் உணவு மட்டும் வழங்கப்பட்டது. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், மினி பஸ்களும் நிறுத்தப்பட்டதால் நகரமே வெறிச்சோடியது. இதேபோன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டன. பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது.
எல்லைகள் மூடல்
தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி–சாத்தூர் ரோடு தோட்டிலோவன்பட்டி விலக்கில் கிழக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அங்குத்தாய் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் வருகிற 31–ந்தேதி வரையிலும் வீடுகளிலேயே இருக்க வேண்டும். அதற்கு முன்பாக வெளியூர்களுக்கு திரும்ப செல்லக் கூடாது என்று அறிவுறுத்தினர்.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்ட எல்லைகளான செய்துங்கநல்லூர், வசவப்பபுரம், விளாத்திகுளம் அருகே சென்னமரெட்டிபட்டி, வேம்பார், தங்கம்மாள்புரம், காடல்குடி, எட்டயபுரம் அருகே மாசார்பட்டி, சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பு, பெரியதாழை உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
Related Tags :
Next Story