கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்படும் - கலெக்டர் எச்சரிக்கை
கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்தார்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மருத்துப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் யாஸ்மின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்கள், மருந்துக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-
அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. நோயின் தன்மை தீவிரமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளின் உதவியை அரசு நாடியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள தனிவார்டில் 50 சதவீதம் நிரம்பினால், உடனடியாக தனியார் மருத்துவமனைகளும் தங்களது பொதுப்பிரிவு வார்டில் 25 சதவீதம் கொரோனா நோய் தடுப்பு வார்டாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கான கட்டமைப்பு வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதுதொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை பரிசோதிக்க ரத்த பரிசோதனை மையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனா பரிசோதனை செய்ய ரூ.4,500 பெறப்படும்.
கொரோனா அறிகுறியுடன் தனியார் மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை வேலூர் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு அரசுடன் இணைந்து தனியார் டாக்டர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா அறிகுறி காணப்படுபவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும். கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்தவர்கள், கொரோனா அறிகுறி காணப்படுபவர்களை கண்காணிக்க தாசில்தார் தலைமையில் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், போலீசார் அடங்கிய குழுவினர் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி காணப்படும் நபர்கள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 0416-2258016, 9154153692 ஆகிய எண்களில் தெரிவிக்க வேண்டும். மருத்துவமனைகளில் இடையூறு மற்றும் தகராறு செய்யும் நபர்கள் குறித்தும் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். அதன்பேரில் போலீசார் உடனடியாக அங்கு வந்து அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள். டாக்டர்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்.
அனைத்து மருத்துவ பணியாளர்களும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். புறநோயாளிகள் பிரிவில் மக்கள் கூட்டமாக நிற்க அனுமதிக்க கூடாது. வரிசையாக இடைவெளி விட்டு நிற்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் நுழைவு வாயிலில் கைகளை கழுவ தண்ணீர்ெதாட்டி அமைக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு முதல்-அமைச்சர் காப்பீடு திட்டம் பொருந்தும். டாக்டர் பரிந்துரையின்றி மருந்து கடைகளில் யாருக்கும் மருந்து, மாத்திரைகள் கொடுக்க கூடாது.
144 தடை உத்தரவின்போது வழக்கம்ேபால் காய்கறி, மளிகை, மருந்துக்கடைகள் திறந்திருக்கும். அதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதோ என்று பயப்பட வேண்டாம். ரேஷன் கடைகள் மூலம் அனைத்துவிதமான மளிகை பொருட்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஒருநாளைக்கு 30 அட்டைதாரர்கள் வீதம் அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில், வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன் (பொறுப்பு), அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டீன் செல்வி, மகளிர் திட்ட அலுவலர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story