ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில கேன்டீன் ஊழியர்கள் குவிந்ததால் பரபரப்பு
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில கேன்டீன் ஊழியர்கள் லாரியில் வந்து குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை,
கொரோனா வைரஸ் காரணமாக தமிழக முழுவதும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு வருகிறது. மேலும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கர்நாடக மாநிலம் யஸ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் கேன்டீனில் பணிபுரியும் வடமாநிலத்தை சேர்ந்த 150 ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி செல்ல அங்கிருந்து தனித்தனியாக வந்து கர்நாடக மற்றும் தமிழக எல்லையான ஜுஜுவாடி பகுதிக்கு அனைவரும் வந்தனர்.
அதன்பிறகு அவர்கள் ஒன்று கூடி லாரிகள் மூலம் நேற்று காலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை வந்தடைந்தனர். ஒரே நேரத்தில் 150 வடமாநிலத்தினர் வந்ததால், பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த முயன்ற போது யாரும் சோதனை செய்ய மறுத்துவிட்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் எங்களை தனி ரெயில் மூலம் சென்னைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு ரெயில் நிலைய மேலாளர் சுந்தரமூர்த்தி வாய்ப்பு இல்லை என கூறினார். இதனால் அவர்கள் அனைவரும் அங்கிருந்து திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் இணைந்து பக்கிரிதக்கா அருகே சென்று கொண்டிருந்த வடமாநிலத்தினரை அழைத்து வந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
அதன்பிறகு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 1-வது பிளாட்பாரத்தில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் வந்த திருவனந்தபுரம் - கோரக்பூர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனி பெட்டியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அவர்களை சென்னை வரை ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story