வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 5:53 PM GMT)

வெளிநாட்டில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து, கலெக்டர் உமா மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது கலெக்டர் உமா மகேஸ்வரி கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முன்பே திட்டமிடப்பட்ட திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் மண்டபங்களில் நடத்தக்கூடாது. வருகிற 31-ந் தேதி வரையில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சட்டப்படி நடவடிக்கை

விழாதாரர்கள் திருமண நிகழ்ச்சிகளை வீடுகளில் எளிய முறையில் நடத்த அறிவுறுத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 843 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 140 பேர் பொது மக்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள், மேலும் சுகாதார துறையின் கவனத்திற்கு வராமல் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் தகவல் குறித்து இலவச எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். தனிமைப்படுத்தப்பட்ட அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் கைகளில் முத்திரை குத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வாகனங்கள் பறிமுதல்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,600 போலீசார் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட எல்லைகளில் 10 சோதனை சாவடிகளும், மாவட்டத்தின் உட்புறங்களில் 38 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். இதுமட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 4 சுங்கச்சாவடிகளிலும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளனர். அமைக்கப்பட உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசாருடன், சுகாதார பணியாளர்கள் இணைந்து செயல்பட உள்ளனர்.

இதேபோல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களை சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறையினருடன் இணைந்து போலீசாரும் கண்காணிக்க உள்ளனர். அவர்களை கண்காணிக்க தனி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதையும் மீறி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட, பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள், ரவுடிகள், மது பானங்களை பதுக்கி விற்பவர்கள் உள்ளிட்டோர்கள் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.

Next Story