கொரோனா பரவுவது யாரால் என்பதில் தகராறு: ஊட்டியில் தொழிலாளி குத்திக்கொலை - போண்டா மாஸ்டர் கைது


கொரோனா பரவுவது யாரால் என்பதில் தகராறு: ஊட்டியில் தொழிலாளி குத்திக்கொலை - போண்டா மாஸ்டர் கைது
x
தினத்தந்தி 25 March 2020 4:15 AM IST (Updated: 25 March 2020 1:12 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கொரோனா பரவுவது யாரால் என்கிற தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த போண்டா மாஸ்டரை போலீசார் கைது செய் தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 35). இவர் நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி மூட்டைகளை ஏற்றி, இறக்கும் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சாந்தாமணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் ஜோதிமணி வேலை பார்த்த களைப்பில் டீ குடிப்பதற்காக ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையம் செல்லும் பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அந்த கடையில் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த தேவதாஸ் (43) என்பவர் போண்டா மாஸ்டராக இருந்தார்.

இந்த நிலையில் அவர் போண்டா, வடை தயார் செய்வதற்காக பெரிய வெங்காயத்தை கத்தியால் நறுக்கிக்கொண்டு இருந்தார். இதற்கிடையே தேவதாஸ், கடைக்கு டீ குடிக்க வந்த ஜோதிமணியை பார்த்து கொரோனா வைரஸ் பரவுவதால் சிறிது தூரம் தள்ளி நிற்கும்படி கூறினார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது நான் ஏன் தள்ளி நிற்க வேண்டும், கேரள மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு உள்ளது. அதனால் நீங்கள் தான் தள்ளி நிற்க வேண்டும் என்று ஜோதிமணி பேசினார். இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த தேவதாஸ் கத்தியை எடுத்து ஜோதிமணியின் கழுத்தில் குத்தினார். அதனால் அவரின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. மேலும் அவர் சம்பவ இடத்தில் கீழே விழுந்து மயங்கினார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் ஜோதிமணியை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கொண்டு வரும் வழியிலேயே ஜோதிமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜோதிமணியை கொலை செய்தபோண்டா மாஸ்டர் தேவதாசை கைது செய்தனர். கொரோனா வைரஸ் உயிரை பறிக்கும் என்கிற நிலையில், அதனால் கொலையும் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story