ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் மக்கள் அவதி


ஏ.டி.எம்.மில் பணம் இல்லாததால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 25 March 2020 3:30 AM IST (Updated: 25 March 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தார்கள்.மேலும் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் சிரமம் அடைந்தார்கள்.

சிவகாசி,

கொரோனாவை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவகாசியில் கையில் பணம் இல்லாத பலர் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க ஏ.டி.எம். எந்திரங்களை நாடினர். ஆனால் பல ஏ.டி.எம். எந்திரங்களில் போதிய பணம் இல்லாமல் இருந்தது. இதனால் அவதி அடைந்தார்கள்.ஒரு சில ஏ.டி.எம்.களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்தனர்.

சிவகாசி பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு வங்கியில் வாடிக்கையாளர்களை வங்கிக்குள் அனுமதிக்காமல் அனைத்து பணிகளையும் வெளியே செய்யும்படி வங்கி நிர்வாகத்தினர் வலியுறுத்தினர். பணம் செலுத்துபவர்கள் எடுப்பவர்கள் என தலா ஒருவர் வீதம் 2 பேர் மட்டும் வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்து இருந்தனர்.

சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலை, தீப்பெட்டி ஆலை, அச்சகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு நேற்று மாலை முதல் விடுமுறை விடப்பட்டது. அவர்கள் பணியாற்றிய காலத்துக்கு மட்டும் சம்பளம் வழங்கப்பட்டது. இதனால் அடுத்து உள்ள 7 நாட்களுக்கு பணிகள் இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கும் இவர்களுக்கு போதிய வருமானம் இல்லாத நிலை ஏற்படும். இதனால் இவர்கள் வங்கியில் செலுத்த வேண்டிய தவணை தொகைக்கு கூடுதல் அவகாசம் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சரவணன் என்பவர் கூறியதாவது:-

நான் வங்கியில் கடன் பெற்று சரக்கு வாகனம் வாங்கி ஓட்டி வருகிறேன்.தடை உத்தரவால் எனது தொழில் வருகிற 31-ந்தேதி வரை நடக்காமல் போகும். ஆனால் நான் எனது வாகனத்துக்குரிய கடன் தொகையை வங்கிக்கு செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தவில்லை என்றால் வாகனத்தை பறிமுதல் செய்ய வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் வங்கிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி சலுகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

மாவட்டம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.தற்போதைய சூழலில் கோவில்களில் உணவை பார்சல்களாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டதாரி காங்கிரஸ் மாநில நிர்வாகி திருத்தங்கல் மைக்கேல் அற நிலையத்துறைக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Next Story