கோடை விடுமுறையில் விழிப்புடன் இருக்க வேண்டும்: பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு அறிவுரை


கோடை விடுமுறையில் விழிப்புடன் இருக்க வேண்டும்: பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 24 March 2020 9:00 PM GMT (Updated: 24 March 2020 8:22 PM GMT)

பிளஸ்-2 முடித்த மாணவர்கள்கோடை விடுமுறையில்கொரோனா அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்கவிழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

சிவகங்கை, 

தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வு நடந்து முடிந்தது. மாவட்டத்தில் 15,002 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 6,553 பேரும், சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 5,329 பேரும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 3,120 பேரும் தேர்வு எழுதினர். தேர்வெழுத விண்ணப்பித்தவர்களில் 731 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்கு வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் தோ்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்து தேர்வெழுத வந்திருந்தனா்.பின்னர் தேர்வு முடிந்த பின்பு பள்ளி செயலா் சேகர் மாணவ-மாணவிகளிடம் கூறும்போது, தமிழக அரசு ஆணைப்படி கோடை விடுமுறையில் அனைவரும் தங்களை கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும்.

வெளியிடங்களுக்கு சென்று, வீடு திரும்பியவுடன் தங்கள் கைகளை கை கழுவும் திரவம் அல்லது சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

இதில் தலைமை ஆசிரியர் முத்துக்குமார், உதவி தலைமை ஆசிரியா் தியாகராஜன் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக தேர்வெழுத வந்த மாணவ-மாணவிகள் மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த நீரில் தங்கள் கைகளை சுத்தம் செய்து, அதன் பின்னர் தேர்வு அறைக்கு சென்றனர். இதையொட்டி பள்ளி வளாகத்தில் மஞ்சள் கலந்த நீர் தெளிக்கப்பட்டது.

Next Story