ஆரணி பகுதி கிராமங்களுக்கு வெளிநாட்டில் இருந்து திரும்பிய 24 பேரை தனிமைப்படுத்த உத்தரவு


ஆரணி பகுதி கிராமங்களுக்கு வெளிநாட்டில் இருந்து திரும்பிய 24 பேரை தனிமைப்படுத்த உத்தரவு
x
தினத்தந்தி 24 March 2020 10:30 PM GMT (Updated: 24 March 2020 8:50 PM GMT)

ஆரணி பகுதி கிராமங்களுக்கு வெளிநாட்டிலிருந்து திரும்பிய 24 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆரணி, 

ஆரணி பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் முள்ளண்டிரம், எஸ்.வி.நகரம், ஆரணி டவுன் ஆரணிபாளையம், அருணகிரி சத்திரம் பகுதிகளை சேர்ந்த 13 பேர் மேற்கண்ட நாடுகளில் இருந்து ஊர் திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இவர்களை மருத்துவ குழுவினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து ஆரணி - எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா கூறுகையில், ‘‘இவர்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது, வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அவர்கள் வெளியில் வந்தால் அது குறித்த தகவல்களை அருகாமையில் உள்ளவர்கள் போலீஸ் நிலையத்திற்கோ, மருத்துவத் துறைக்கோ தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ துறையினரும் அவர்களை கண்காணித்து வருகின்றனர். இது தொடர்பாக கிராமப்புறங்களில் ஊராட்சித் தலைவர்களை கொண்டு நேற்று மாலை 6 மணிமுதல் பொதுமக்கள் 4 பேருக்கு மேல் எங்கும் கூடக்கூடாது என்பதை வலியுறுத்தி தண்டோரா போடப்பட்டு வருகிறது என்றனர்.

இதேபோல் மேற்கு ஆரணி வட்டாரத்தில் உள்ள தச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மதன் கூறுகையில், எங்கள் வட்டத்தில் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் 11 பேர் ஊர் திரும்பியுள்ளனர். அவர்களை வீட்டிலேயே தங்கியிருக்க உத்தரவிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.

இந்த நிலையில், அடையபுலம் ஊராட்சித் தலைவர் அசோக்குமார் தலைமையில் கிராமம் முழுவதும் ஒவ்வொரு வீடுகளிலும் மஞ்சள் தெளிக்கப்பட்டு வேப்பிலையை வீட்டில் சொருகி வைக்கவும் வீடுகளின் முன்பு சாணம் தெளிக்க வேண்டும். காலை, மாலை இரு வேளையும் வீடுகளில் சாம்பிராணி தூபம் போடவேண்டும் என உத்தரவிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

Next Story