கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அனைத்து துறைகளும் இணைந்து பணியாற்ற வேண்டுகோள்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அனைத்து துறைகளும் இணைந்து பணியாற்ற வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 March 2020 9:30 PM GMT (Updated: 24 March 2020 9:01 PM GMT)

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் பொதுசுகாதாரத்துறையுடன், வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறை மற்றும் அங்கன்வாடி பணியாளா்களும் இணைந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

சிவகங்கை, 

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரத்துறையின் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து தமிழக அரசு பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் வரும் காலங்களிலும் இந்த வைரஸ் வராமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கிராமப் பகுதிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொதுசுகாதாரத்துறையுடன், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, அங்கன்வாடி பணியாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, வெளிநாட்டிற்கு பணிக்கு சென்றவா்களில் அதிகமானோர் கிராமப் பகுதிகளை சோ்ந்தவா்கள் என்பதால் அவா்களின் வருகை குறித்து உடனடியாக அருகில் உள்ள சுகாதாரத்துறை அலுவலா்களுக்கு தெரிவித்து பதிவு செய்ய வேண்டும். மேலும், அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க ஏதுவாக அவா்கள் வீட்டின் முன்பு ஸ்டிக்கா் ஒட்டப்படும்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், பொதுசுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, துணை இயக்குனர் யோகவதி, மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, மாவட்ட சமூகநல அலுவலர் வசந்தா மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story