திருவள்ளூர் அருகே, தொழிலாளி வெட்டிக்கொலை


திருவள்ளூர் அருகே, தொழிலாளி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 24 March 2020 11:00 PM GMT (Updated: 24 March 2020 10:00 PM GMT)

திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள உடையார் கோவில் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 38). தொழிலாளி. நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஆனந்தன், தனது வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் தன்னுடைய வீட்டின் முன்பகுதியில் உள்ள மரத்தில் துணியால் ஊஞ்சல் கட்டி தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஆனந்தனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து ஆனந்தனின் உறவினர் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆனந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனந்தனை யாரேனும் முன்விரோதம் காரணமாக கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டில் திருமழிசை பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த 2 பேரின் தலையில் கல்லைப்போட்டு கொடூர கொலை செய்தவர். மேலும் ஒரு நபரை கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்று பின்னர் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story