பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு தடையில்லை - கலெக்டர் வினய் பேட்டி


பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு தடையில்லை - கலெக்டர் வினய் பேட்டி
x
தினத்தந்தி 25 March 2020 3:45 AM IST (Updated: 25 March 2020 3:46 AM IST)
t-max-icont-min-icon

144 தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கும் தடையில்லை என்று கலெக்டர் வினய் கூறினார். இது குறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை, 

கொரோனா பரவுவதை தடுப்பதற்காக அரசு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும் பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளதால், 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூட்டம் கூட கூடாது. வீட்டிலேயே அனைவரும் தங்கி இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே வரலாம். அப்படியே வந்தாலும் ஒருவருக்கு ஒருவர் 2 மீட்டர் தூரத்தை கடைபிடிக்க வேண்டும்.

அடிப்படை மற்றும் அவசர தேவைகளை தவிர்த்து ஆட்டோக்கள், கார்கள் என அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி கிடையாது.  பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அடிப்படை தேவைகளான பால், காய்கறி, மளிகை பொருட்கள், இறைச்சி-மீன் கடைகள் போன்றவை செயல்படலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. இவை தவிர மற்ற எந்த கடைகளும் திறக்க கூடாது. சாலையோர வியாபாரத்திற்கு அனுமதியில்லை. அரசு அலுவலகங்களை தவிர மற்ற எந்த நிறுவனங்களும் செயல்பட கூடாது. 

மதுரையில் இருந்து வெளிநாடு செல்லும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் போக்குவரத்து விமானமும் நிறுத்தப்படும். இன்று (நேற்று) மதுரை வந்த விமான பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பேரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து வருகிறோம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story