மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது - மும்பையில் மேலும் ஒருவர் பலி
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது. மும்பையில் மேலும் ஒருவர் பலியானார்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களை பயமுறுத்தி வருகிறது. எனவே கொரோனாவை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு மராட்டியத்தில் 97 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் மும்பையில் 6 பேர், புனேயில் 2 பேர், அகமத்நகர், சத்தாராவை சேர்ந்த தலா ஒருவர் ஆவர். இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோல நேற்று மும்பை கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் பலியானார். இவர் சமீபத்தில் இங்கிலாந்து சென்றுவிட்டு, கடந்த 15-ந் தேதி ஆமதாபாத் வந்திருக்கிறார். பின்னர் அங்கு இருந்து கடந்த 20-ந் தேதி மும்பை வந்துள்ளார். காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர் நேற்று முன்தினம் கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
கொரோனாவால் உயிரிழந்த முதியவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்துள்ளது. 65 வயது முதியவர் உயிரிழந்ததன் மூலம் மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் ஒருவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக மும்பையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிதாக கொரோனா பாதித்தவர்களில் 2 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அல்ல. ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களிடம் இருந்து அவர்களுக்கு பரவி உள்ளது.
மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களில் 2 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ 15 பேரின் உடல் நிலை தேறி உள்ளது. அவர்கள் விரைவில் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார்கள். ஆனால் இறுதி முடிவை டாக்டர்கள் தான் எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story