சத்தியமங்கலம் மார்க்கெட்டில், மல்லிகைப்பூ கிலோ ரூ.60-க்கு விற்பனை


சத்தியமங்கலம் மார்க்கெட்டில், மல்லிகைப்பூ கிலோ ரூ.60-க்கு விற்பனை
x
தினத்தந்தி 25 March 2020 4:00 AM IST (Updated: 25 March 2020 7:54 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.60-க்கு விற்பனை ஆனது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் மலர்கள் விவசாயிகள் சங்கம் (பூ மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.

அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம், ராஜன் நகர், கொத்தமங்கலம், சிக்கரசம்பாளையம் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 3 டன் மலர்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் ஏலம் தொடங்கியது. அப்போது மல்லிகைப்பூ (கிலோ ஒன்று) ரூ.150-க்கும், முல்லை ரூ.180-க்கும், காக்கடா ரூ.120-க்கும், ஜாதிமல்லி ரூ.250-க்கும், செண்டுமல்லி ரூ.8-க்கும், பட்டுப்பூ ரூ.20-க்கும். கனகாம்பரம் ரூ.50-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும் விற்பனை ஆனது.

பின்னர் 11.30 மணி அளவில் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ ஒன்று) ரூ.60-க்கும், முல்லை ரூ.80-க்கும், காக்கடா ரூ.48-க்கும், ஜாதிமல்லி ரூ.200-க்கும் ஏலம் போனது. செண்டுமல்லி, பட்டுப்பூ, கனகாம்பரம், சம்பங்கி போன்ற பூக்கள் ஏலம் போகவில்லை.

இதுகுறித்து சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், ‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூக்கள் வாங்க வெளியூரில் இருந்து வியாபாரிகள் இங்கு வரவில்லை. இதனால் வியாபாரிகளிடையே போட்டி இல்லாததால் பூக்கள் அதிக விலைக்கு ஏலம் போகவில்லை. காலையில் பூக்கள் தேவை அதிகமாக இருந்ததால் வியாபாரிகளிடைேய ஓரளவுக்கு போட்டி ஏற்பட்டது. இதனால் பூக்கள் சற்று விலை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் பகல் 11.30 மணி அளவில் வியாபாரிகளிடம் போட்டி இல்லை. இதனால் மல்லிகைப்பூ கிலோ ரூ.60-க்கு விற்பனை ஆனது. சத்தியமங்கலத்தில் பூ மார்க்கெட் தொடங்கி 21 ஆண்டுகள் ஆகிறது. மல்லிகைப்பூ இந்த அளவுக்கு குறைந்து விற்பனை ஆனதில்லை,’ என்றனர்.

கடந்த 2 மாதத்துக்கு முன்னர் மல்லிகைப்பூ விலை கிலோ ஒன்று ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை ஆன நிலையில் நேற்று கிலோ ஒன்று ரூ.60-க்கு விற்பனை ஆனது விவசாயிகளை மிகவும் கவலை அடைய செய்து உள்ளது.

Next Story