வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் வீடு அருகே முக கவசம் அணியாமல் செல்லாதீர்கள் - கலெக்டர் கிரண்குராலா எச்சரிக்கை


வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் வீடு அருகே முக கவசம் அணியாமல் செல்லாதீர்கள் - கலெக்டர் கிரண்குராலா எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 March 2020 3:45 AM IST (Updated: 25 March 2020 8:18 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் வீடு அருகே முக கவசம் அணியாமல் செல்லாதீர்கள் என்று கலெக்டர் கிரண்குராலா எச்சரித்து உள்ளார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கலெக்டர் கிரண் குராலா பேசியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் வீடுகளில் பிரத்யேகமான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் மற்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தகுந்த முக கவசங்களின்றி அவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களின் சார்பாக பொது இடங்களில் கிருமிநாசினி கொண்டு கை கழுவும் வசதி ஏற்படுத்தப்படும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களின் சார்பாக அனைத்து இடங்களிலும் ஒலிபெருக்கியின் உதவியால் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வாசகங்கள் தொடர்ந்து ஒலிபரப்பு செய்யப்படும். உணவகங்கள், டீக்கடைகள், பால்கடை, காய்கறிக்கடை, மளிகைக்கடை, இறைச்சிக்கடை, மீன்கடைகள் ஆகிய இடங்களில் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களின் சார்பாக சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கிரண்குராலா கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ரத்தினமாலா, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story