தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் அறிவுரை
சிவகங்கையில் தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
சிவகங்கை,
சிவகங்கையில் கொரோனா நோய் பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. அத்துடன் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி சிவகங்கை நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் ஓட்டல்களில் பார்சல் உணவு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டதால் பல ஓட்டல்கள் அடைக்கப்பட்டன.
அம்மா உணவகம் மற்றும் மருந்து கடைகள், பலசரக்கு கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திறந்திருந்தன. இதனால் சிவகங்கையில் பரபரப்பாக காணப்படும் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தடை உத்தரவு காரணமாக நேற்று முன்தினம் காய்கறிகள் 3 மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. இதைதொடர்ந்து வந்த புகாரின்பேரில் கலெக்டர் ெஜயகாந்தன் காய்கறிகள் தடையின்றி உரிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து நேற்று காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனையானது.
வாரம்தோறும் புதன் கிழமை அன்று சிவகங்கையில் வாரச்சந்தை நடைபெறும். இந்தநிலையில் தடை உத்தரவு காரணமாக நேற்று சந்தை நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள் சிவன்கோவில் அருகில் தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்றனர்.
தடை உத்தரவை மீறி சிவகங்கை நகரில் இளைஞர்கள் பலர் இருசக்கர வாகனங்களில் சுற்றினர். இதைதொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story