ஊரடங்கு முடியும் வரை சாலையோரத்தில் வசிப்போருக்கு உணவு வழங்க ஏற்பாடு


ஊரடங்கு முடியும் வரை சாலையோரத்தில் வசிப்போருக்கு உணவு வழங்க ஏற்பாடு
x
தினத்தந்தி 26 March 2020 3:45 AM IST (Updated: 26 March 2020 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு முடியும் வரை சாலையோரத்தில் வசிப்போருக்கு வருவாய்த்துறை சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஊரடங்கு உத்தரவைமுன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் பெரும்பான்மையான இடங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கோவில்கள் முன்பும் மற்றும் முக்கிய இடங்களில் ஏராளமானோர் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். இவர்கள் அன்றாடம் கிடைக்கும் தொகையை வைத்து சாப்பிட்டு விட்டு வாழ்ந்து வருகின்றனர்.

கடைகள் அடைக்கப்பட்டதால் உணவுக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை, மதியம் மாலை என மூன்று வேளையும் வருவாய்த்துறை சார்பில் உணவு வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் கிருஷ்ணவேணி மற்றும் வருவாய் ஆய்வாளர் பால்துரை ஆகியோர் வழங்கினர்.

தாசில்தார் கிருஷ்ண வேணி இதுகுறித்து கூறுகையில், கலெக்டர் மற்றும் சப்-கலெக்டர் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் முக்கிய இடங்களில் ஆதரவற்று இருக்கும் முதியவர்கள் உட்பட அனைவருக்கும் மூன்று வேளையும் உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஊரடங்கு உத்தரவு உள்ள 21 நாட்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்க முடிவு செய்து உள்ளோம். மேலும் கோவில்கள் மட்டுமின்றி எங்கு இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று வழங்குவோம் என்றார். மேலும் தாலுகா அலுவலகத்திற்கு வரும் ஆதரவற்றவர்களுக்கும் உணவு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story