அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் செவிலியர்கள், ஊழியர்களுக்காக 200 பஸ்கள் இயக்கம் - சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை
சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளில் ஈடுபடும் செவிலியர்கள், ஊழியர்களுக்காக 200 மாநகர பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.
சென்னை,
இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் கோ.கணேசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அத்தியாவசிய பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த அளவில் பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். எனவே அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்களை இயக்கிட வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் சென்னை தலைமைச் செயலக அலுவலர்கள், பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களது பணிக்கு வந்து செல்ல ஏதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பூந்தமல்லி, மணலி, எண்ணூர், நெற்குன்றம், தேனாம்பேட்டை, துரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200 மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன.
இத்தகைய அவசர பணிகளுக்கு மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் போதிய டிரைவர்களும், கண்டக்டர்களும் தயார்நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தேவைக்கு ஏற்ப அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்காக பஸ்களை இயக்குவதற்கு மாநகர போக்குவரத்து கழகம் தயார்நிலையில் உள்ளது என்றும், இந்த பஸ்களில் வேறு யாரும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story