மாணவர் சேர்க்கையும் தள்ளிவைப்பு: கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏப்ரல் 20-ந் தேதி வரை ஒத்திவைப்பு - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு


மாணவர் சேர்க்கையும் தள்ளிவைப்பு: கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஏப்ரல் 20-ந் தேதி வரை ஒத்திவைப்பு - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 27 March 2020 4:30 AM IST (Updated: 27 March 2020 12:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அடுத்த மாதம் 20-ந் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும், பள்ளி மாணவர் சேர்க்கையும் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டன. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக மாநில அரசு அறிவித்தது. மேலும் 7 முதல் 9-ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கர்நாடகத்தில் 27-ந் தேதி (அதாவது இன்று) தொடங்கி அடுத்த மாதம் 9-ந் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாநில அரசு ஒத்திவைத்து உள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாக பரவியது.

இதுகுறித்து மாநில பள்ளிகல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் விளக்கம் அளித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வுகள் ரத்து செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்வது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதுகுறித்து அரசு ஆலோசிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் வெறும் வதந்தி. இத்தகைய செய்திகளை மாணவர்களும், பெற்றோரும் நம்ப வேண்டாம். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே நேற்று கர்நாடக பள்ளி கல்வித்துறை சார்பில் ஒரு செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (அதாவது இன்று) தொடங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந் தேதி வரை தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம்(ஏப்ரல்) 14-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளதால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அடுத்த மாதம்(ஏப்ரல்) 20-ந் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது. அதுபோல 7 முதல் 9-ம் வகுப்பு வரையிலான தேர்வுகளையும் 20-ந் தேதி வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் புதிதாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story