ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி செல்லும் பொதுமக்கள்


ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி செல்லும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 March 2020 2:30 AM IST (Updated: 27 March 2020 2:13 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பொதுமக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.

ராமேசுவரம், 

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் ராமேசுவரத்தில் பொதுமக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். அவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் வருகிற (ஏப்ரல்) 14-ந்தேதி வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவால் ராமேசுவரம் பகுதி

தொடர்ந்து மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால் ராமேசுவரம் கோவில் ரதவீதிகளின் சாலை, அக்னிதீர்த்த கடற்கரை, நடைமேடை, பஸ்நிலையம், ரெயில் நிலையம், துறைமுக பகுதி என அனைத்து இடங்களும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டு வருகின்றன.

அத்தியாவசிய பொருட்களை மக்கள் கூட்டம் இல்லாமல் பாதுகாப்புடன் வாங்க தாசில்தார் மற்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளதால் மருந்துகடை, காய்கறிகடை, பலசரக்கு கடைகளில் பொதுமக்கள் 1 மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பாதுகாப்புடன் வாங்கி சென்றனர்.

இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி ராமேசுவரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்னை, அரக்கோணம், ஆந்திரா, சித்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து ரெயில் மூலம் 40 பேர் வந்தனர். திருமணம் முடிந்து அன்று இரவு ரெயில் மூலம் ஊருக்கு புறப்பட இருந்த நிலையில் திடீரென அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன.

இதனால் அவர்களில் 15 பேர் ராமேசுவரம் ரெயில் நிலையம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள வீடுகளிலும், மீதமுள்ள 25 பேர் தங்கச்சிமடத்தில் உள்ள சில வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த 40 பேருக்கும் தேவையான பொருட்கள், காய்கறிகளை தாசில்தார் அப்துல்ஜபார் நேரில் சென்று வழங்கினார்.

மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்த நிலையில் இருசக்கர வாகனங்களில் பலர் தேவையின்றி சுற்றித்திரிகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story