நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 24 பேர் கைது - வள்ளியூரில் திருமணங்கள் நிறுத்தம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். வள்ளியூரில் திருமணங்கள் நிறுத்தப்பட்டன.
திசையன்விளை,
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி மற்றும் போலீசார் திசையன்விளை பஜாரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இடைச்சிவிளையைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 28), திசையன்விளையைச் சேர்ந்த அந்தோணி ரூபன் (22), கிருஷ்ணகுமார் (46), பள்ளங்கிணறு பகுதியைச் சேர்ந்த சிவநாதன் (30), பொட்டக்குளம் ரசூல், உவரியைச் சேர்ந்த டிக்சன் ஆகிய 6 பேரும் 144 தடை உத்தரவை மீறி வெளியில் ஒன்று கூடியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்த இசக்கித்துரை, ராஜேஷ், பரமசிவன் ஆகியோர் தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள், ஆட்டோ ஆகியவற்றில் பஜாரில் சுற்றித்திரிந்தனர். அவர்களை திருக்குறுங்குடி போலீசார் கைது செய்தனர். இதேபோல் கடையநல்லூர், அச்சன்புதூர் ஆகிய பகுதிகளில் தடை உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்ததாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூலைக்கரைப்பட்டி காந்திநகர், கீரன்குளம் ஆகிய பகுதியில் 144 தடை உத்தரவை கடைபிடிக்காமல் இளைஞர்கள் சிலர் கைப்பந்து விளையாடிக் கொண்டு இருந்தனர். இதுபற்றி அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் விரைந்து வந்து கைப்பந்து விளையாடிக் கொண்டு இருந்தவர்களை அறிவுரை கூறி கலைந்து போகச் செய்தனர். பரப்பாடியில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சாலைகளில் மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிந்த 20 பேரை பிடித்து அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்கள்.
வள்ளியூர் முருகன் கோவிலில் முகூர்த்த நாளான நேற்று 5 திருமணங்கள் நடைபெற முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக உறவினர்கள் பங்கேற்க முடியாததால் அதில் 2 திருமணங்கள் மட்டும் நேற்று நடந்தது. மற்ற 3 திருமணங்கள் நிறுத்தப் பட்டன. இதில் 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
கடையநல்லூருக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் வீடுகளை கண்டறிந்து கடையநல்லூர் நகரசபை சார்பில் அந்தந்த வீடுகளில் தனிமைப்படுத்துதல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் சில இடங்களில் அந்தந்த வீட்டின் உரிமையாளர்கள் அந்த நோட்டீசை கிழித்து அழித்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நகரசபை சார்பில் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடையநல்லூர் நகரசபை ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் அம்பை பூக்கடை பஜாரில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தடையை மீறி மோட்டார் சைக்கிள், காரில் வந்தவர்களை மறித்து அவசர காரணங்கள் இன்றி வெளியே வந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் யாரும் குளிக்கக்கூடாது என்று போலீசார் தடை விதித்துள்ளனர். இதற்காக ஆற்றில் இறங்கும் பகுதிகளில் கயிறு கட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story