மும்பையில் ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாநகராட்சி தகவல்
மும்பையில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
மும்பை,
நாட்டின் நிதிதலைநகரான மும்பையை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பாடாய் படுத்தி வருகிறது. கொரோனா என்னும் கொடிய நோயால் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் மும்பை நகரம் முடங்கி போய் உள்ளது. எனினும் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வரை மும்பை பெருநகரில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று மும்பையில் மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மும்பையில் கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் வந்த 1,531 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். நேற்று மட்டும் 124 பேர் ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் பெண்கள். 8 பேர் ஆண்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 14 வயது சிறுவன், 16 வயது சிறுமி, 85 வயது முதியவரும் அடங்குவர்.
இந்த புதிய நோயாளிகளில் 7 பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். 4 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். மேலும் 4 பேருக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்ற விவரம் இல்லை. 15 பேரும் மும்பையில் உள்ள கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 15 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் மும்பை பெருநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமான 10 பேர் இதுவரை ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story