கூடலூர் அருகே, ரேஷன் கடை, பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்
கூடலூர் அருகே ரேஷன் கடை, பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி போஸ்பாரா பகுதியில் உள்ள ரேஷன் கடையை நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு காட்டு யானை முற்றுகையிட்டது. பின்னர் கடையின் ஜன்னலை உடைத்து துதிக்கையை உள்ளே நுழைத்தது. தொடர்ந்து அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வெளியே எடுத்து தின்றது. மேலும் சிதறடித்து அட்டகாசம் செய்தது.
விடியற்காலை வரை அப்பகுதியில் நின்ற காட்டு யானை, அதன்பின்னர் வனத்துக்குள் சென்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த முதுமலை வனத்துறையினர், சேதம் அடைந்த ரேஷன் கடையை பார்வையிட்டனர்.
இதேபோன்று கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடியில் அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. அப்பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் வந்தது. தொடர்ந்து பள்ளி சுற்றுச்சுவரை காட்டு யானைகள் உடைத்து தள்ளியது. இதுகுறித்து தகவல் அறிந்த கார்குடி வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆதிவாசி மக்களின் குழந்தைகள் மட்டும் படிக்கும் பள்ளியை காட்டு யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
இதனால் உரிய நிதி ஒதுக்கி சேதம் அடைந்த கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவரை சீரமைக்க வனத்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story