வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க புதிய செயலி - அமைச்சர் தொடங்கி வைத்தார்


வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க புதிய செயலி - அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 March 2020 8:30 PM GMT (Updated: 27 March 2020 7:52 PM GMT)

வெளிநாட்டில் இருந்து வந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே செல்லாமல் இருப்பதை கண்காணிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட செயலியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை, 

கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சரி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் ராஜகோபால், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு, வெளிநாட்டிலிருந்து வந்து வீட்டில் தனிமைபடுத்தப்பட்டவர்கள், வெளியே செல்லாமல் இருப்பதை கண்காணிக்க சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புதிதாக உருவாக்கிய செயலியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது:-

தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அரசு நடவடிக்கைகளுக்கு வணிகர்களும் ஒத்துழைப்பு தந்தால்தான் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். வணிகர்கள் சரக்குகளை கடைகளில் வாங்கி வாகனங்களில் ஏற்றி கொண்டு வர துணை போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி பெற்று கொண்டு வரலாம்.

பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், இறைச்சி, மீன், மளிகை பொருட்கள், மருந்தகங்கள், ஓட்டல்களில் பார்சல் உணவு, காய்கறிகள் உள்ளிட்டவை வழங்க கடைகள் வழக்கம்போல் செயல்பட தடை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட வருவாய் அதிகாரி லதா, மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மங்களேஸ்வரன், முரளிதரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாகர், மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, மருத்துவ கல்லூரி மருத்துவ அலுவலர் மீனா, மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயநாதன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா மற்றும் வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story