பட்டணம்காத்தான் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்


பட்டணம்காத்தான் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
x
தினத்தந்தி 27 March 2020 9:30 PM GMT (Updated: 27 March 2020 8:18 PM GMT)

மண்டபம்ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பனைக்குளம், 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் இனிவரும் 21 நாட்களுக்கு தாங்களாகவே ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டன. அதன்படி கலெக்டர் வீரராகவ ராவ் மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி நிர்வாகம், வருவாய், காவல்துறையினர், அரசு ஊழியர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

மேலும் அதிகாரிகள் கிராம பகுதிகளில் சுகாதாரத்துறை, போலீசார் ஆகியோருடன் சென்று கொரோனா பாதிப்பு குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது ஏற்பாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாரதிநகர் மற்றும் முக்கிய வீதிகளில் தண்ணீர் டேங்கர் மூலம் மஞ்சள், வேப்ப இலை, கிருமிநாசினி மருந்து கலவைகளை தெருக்கள் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதில் துணை கலெக்டர் சுகபுத்ரா, மண்டபம் ஒன்றிய ஆணையாளர் சேவுகப்பெருமாள், ராமநாதபுரம் தாசில்தார் முருகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணை கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன், தணிக்கை உதவி இயக்குனர் அருள்சேகரன், போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை, இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் சித்ரா மருது, ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன், ஊராட்சி துணை தலைவர் வினோத், ஊராட்சி செயலர் நாகேந்திரன், உறுப்பினர் மஞ்சுளா மாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஓம்சக்தி நகர் பொது நல சங்க செயலாளர் ரவி, டேங்கர் உரிமையாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்ட ஊராட்சி தலைவர் சித்ரா மருதுவை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Next Story