ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை


ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 March 2020 10:45 PM GMT (Updated: 28 March 2020 9:31 PM GMT)

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை தடை உத்தரவை மீறியதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என 450-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. சமூக வலைத்தளங்களில் இதுபற்றி வதந்தி பரப்பிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது 144 தடை சட்டத்தின்கீழ் சட்ட ரீதியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் வித்யா, திருவள்ளூர் பெரியகுப்பம் மேம்பாலம் அருகில் வசிக்கும் நரிக்குறவர் இனமக்களுக்கு உதவிடும் வகையில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச அரிசி மற்றும் உணவு பொருட்களை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

அவருடன் தாசில்தார்கள் விஜயகுமாரி (திருவள்ளூர்), தி.சங்கிலிரதி (ஆவடி) ஆகியோர் உடன் இருந்தனர்.

திருவள்ளூர் நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக திருவள்ளூர் நகரின் முக்கிய பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் கடம்பத்தூர் ஒன்றியம் சிற்றம்பாக்கம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனை கடம்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது சிற்றம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரமணி சீனிவாசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், சத்தரை, காவாங்கொளத்தூர், கீழச்சேரி, முதுகூர்,உளுந்தை என 15 கிராமங்களுக்கு சென்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

மேலும் கை கழுவும் பழக்கம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி கிருமிநாசினிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்களிடம் வழங்கி கிராமங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுரைகளை வழங்கினார்.


Next Story