ஆவடியில் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து - ரூ.30 லட்சம் பொருட்கள் சேதம்


ஆவடியில் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து - ரூ.30 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 28 March 2020 10:30 PM GMT (Updated: 28 March 2020 9:31 PM GMT)

ஆவடியில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

ஆவடி, 

ஆவடி செக்போஸ்ட் அருகே சி.டி.எச். சாலையில் கொரட்டூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த ராஜப்பா என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மூன்று மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் தரை தளத்தில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளும், முதல் 2-வது மற்றும் 3-வது தளங்களில் மேசை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்களும் விற்பனை செய்யப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தற்போது இந்த சூப்பர் மார்க்கெட் மூடப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலையில் சூப்பர் மார்க்கெட்டின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு அதில் இருந்து கரும்புகை வெளியானது. இதை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ஆவடி போலீசார் பார்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 23 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சூப்பர் மார்க்கெட்டில் எரிந்த தீயை 1 மணிநேரம் போராடி அணைத்தனர்.

தரைதளத்தில் உள்ள ஏ.சி. யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். தீ விபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

Next Story