குளித்தலை பகுதியில் , காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கிய போலீசார்
குளித்தலை பகுதியில் காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கு போலீசார் முக கவசம் வழங்கினர்.
குளித்தலை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. குளித்தலை உழவர் சந்தை எதிரே உள்ள சாலை, காவிரிநகர் பகுதியில் போடப்பட்டுள்ள தரைக்கடைகள் மற்றும் நிரந்தர காய்கறி கடைகளில் தினந்தோறும் காலையில் பொதுமக்கள் பலர் காய்கறி வாங்க வருகின்றனர். போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகளின் அறிவுரையின்படி சில கடைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் இடைவெளிவிட்டு வரிசையில் நின்று பொருட்கள் வாங்கிச்செல்கின்றனர். ஆனால் சிலர் முக கவசம் அணியாமல் காய்கறி வாங்க வருகிறார்கள். அவ்வாறு வந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து கொரோனா வைரஸ் பரவுவது பற்றி எடுத்துரைத்தனர். மேலும் அவர்களுக்கு இலவசமாக முக கவசத்தை போலீசார் வழங்கினர்.
வெளிமாநிலங்கள், வெளிநாட்டில் இருந்து குளித்தலை நகரம் மற்றும் கிராம பகுதிக்கு வந்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருசிலர் வெளியில் நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த நபர்களை எச்சரித்தனர். அந்த நபர்களுக்கு அறிவுரை கூறியும் எச்சரித்தும் வருகின்றனர். சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிபவர்களுக்கு அறிவுரை கூறி, தோப்புக்கரணம் போடச்சொல்லி போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர். அதைமீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குளித்தலை பகுதியை சேர்ந்த சிலர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் தந்து உதவிவருகின்றனர்.
Related Tags :
Next Story