மாவட்ட செய்திகள்

அந்தியூர் அருகே மகள்களுடன் சிலம்பம் கற்கும் நடிகை தேவயானி + "||" + Devyani learning martial arts performer with daughters at Andhiyur

அந்தியூர் அருகே மகள்களுடன் சிலம்பம் கற்கும் நடிகை தேவயானி

அந்தியூர் அருகே மகள்களுடன் சிலம்பம் கற்கும் நடிகை தேவயானி
அந்தியூர் அருகே மகள்களுடன் நடிகை தேவயானி சிலம்பம் கற்று வருகிறார்.
அந்தியூர், 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையத்தை சேர்ந்தவர் ராஜகுமாரன். தமிழ் சினிமா இயக்குனர். இவர் விண்ணுக்கும், மண்ணுக்கும் உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். காதல்கோட்டை, சூரியவம்சம் உள்பட பல்வேறு படங்களில் நடித்து தமிழ் நடிகைகளில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தேவயானி. இவரும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள்.

அந்தியூர் அருகே உள்ள ஆலயம் கரடு பகுதியில் ராஜகுமாரனுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் தேவயானி நடித்து வருகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதில் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள் உள்பட யாரும் விதிவிலக்கல்ல.

நடிகை தேவயானியும் தன்னுடைய குடும்பத்தினருடன் சந்தியபாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் முடங்கி உள்ளார். இந்த நிலையில் அரசின் விதிமுறைகளை மதித்து அவர் தனது மகள்களுடன் பண்ணை வீட்டில் சிலம்பம் கற்று வருகிறார்.

இதுகுறித்து தேவயானி கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் எங்களுடைய பண்ணை வீட்டில் தங்கி உள்ளோம். ஏற்கனவே என்னுடைய மகள்கள் பரத நாட்டியம் கற்று வருகிறார்கள். இந்த நிலையில் நானும், எனது மகள்களும் தற்போது சிலம்பம் கற்று வருகிறோம்.

இதற்காக சந்தியபாளையத்தை சேர்ந்த நவோபயா என்ற சிலம்ப பயிற்சியாளர் எங்களுக்கு சிலம்பத்தை கற்று தருகிறார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அரசின் உத்தரவை மதித்து நாங்கள் அனைவரும் 1 மீட்டர் இடைவெளி விட்டு சிலம்பத்தை கற்று வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை