கோவையில் மீன், இறைச்சி வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்


கோவையில் மீன், இறைச்சி வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 29 March 2020 10:30 PM GMT (Updated: 30 March 2020 2:54 AM GMT)

கோவையில் நேற்று மீன் மற்றும் இறைச்சி வாங்குவதற்கு மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கோவை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டுகளில் கட்டம்போட்டு ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு பொதுமக்கள் பொருட்களை வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசாரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன், இறைச்சி வாங்க அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டுகளில் மற்ற நாட்களைவிட மீன் வாங்க நேற்று அதிகம்பேர் வந்தனர்.

கோவைக்கு ராமேசுவரம், தூத்துக்குடியில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் மீன் வருவது வழக்கம். கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவில் இருந்து மீன் வருவது நின்றுவிட்டது. ராமேசுவரத்தில் இருந்து மட்டும் குறைந்த அளவில் மீன் வருகிறது. வரத்து குறைவாக இருந்ததால் மீன் விலை நேற்று உயர்ந்து காணப்பட் டது. இதுகுறித்து உக்கடத்தில் மீன் கடை வைத்து இருக்கும் அப்பாஸ் கூறுகையில், வஞ்சரம் மீன் கிலோ ரூ.1000, விளை மீன், பாறை மீன் கிலோ ரூ.500 என்று விற்பனையாகிறது. மத்தி, அயிலை மீன் வரத்து குறைந்துவிட்டது. ஊரடங்கு காரணமாக கூட்டம் குறைவாக வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட அதிக அளவு கூட்டம் வருகிறது என்றார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு கோழியின் விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. இதனால் உரித்த கோழி ரூ.70-க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று கோழி இறைச்சி கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆட்டிறைச்சி கிலோ ரூ.750 முதல் ரூ.800 வரை விற்பனையானது. பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நிற்க இறைச்சிக்கடைகள் முன் வட்டமிடப்பட்டு இருந்தது. இதனால் இறைச்சி வாங்க வந்த பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நின்றனர். ஆனால் கோவை மாநகரில் ஒருசிலர் எவ்வித கவலையும் இன்றி கூட்டமாக முண்டியடித்தப்படி பொருட்களை வாங்கினர். குறிப்பாக புறநகர் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையில் நேற்று தொய்வு ஏற்பட்டது. பல இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கினார்கள். இதனால் யாருக்காவது கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் அது மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதேபோல் காந்திபுரம் பஸ்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டிலும் நேற்று மக்கள் கூட்டம் இருந்தது. ஆனால் அங்கு போடப்பட்டுள்ள சமூக விலகல் கட்டத்துக்குள் நின்றபடி, காத்திருந்து காய்கறிகளை பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். மேலும் பொதுமக்கள் கூடிய அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. குறிப்பாக கோவை தாமஸ் வீதி ரோடு, உக்கடம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளின் முன்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story