மும்பையில் மின்னல் வேகத்தில் பரவும் தொற்று நோய்; ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா - மேலும் ஒருவர் உயிரிழப்பு


மும்பையில் மின்னல் வேகத்தில் பரவும் தொற்று நோய்; ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா - மேலும் ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 30 March 2020 11:45 PM GMT (Updated: 30 March 2020 7:56 PM GMT)

மும்பையில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 47 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

மும்பை,

நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

மும்பையில் நேற்று முன்தினம் வரை 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 38 பேர் மும்பை நகர்ப்புறத்தில் வசித்து வருபவர்கள் ஆவர். 9 பேர் மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வருபவர்கள்.

ஒரேநாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டதன் மூலம், மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல மும்பையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 15 பேர் ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதேபோல மும்பையில் கொரோனா தொற்றுக்கு ஏற்கனவே 7 பேர் பலியாகி இருந்தனர்.

இந்தநிலையில் மும்பை ஆஸ்பத்திரியில் கடந்த சனிக்கிழமை 78 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை நேற்று வந்தபோது, அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்த உயிர்கொல்லி நோய்க்கு மும்பையில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல புனேயில் ஒருவரும், புல்தானாவில் ஒருவரும் பலியாகி இருப்பதால் மராட்டியம் முழுவதும் 10 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.

இதற்கிடையே மும்பை ஒர்லியில் உள்ள 2 பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநில சுற்றுச்சூழல் துறை மந்திரியும், அந்த தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆதித்ய தாக்கரே திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், "திங்கட் கிழமை (நேற்று) அதிகாலை 2 மணி முதல் கோலிவாடா காலனி, ஜனதா காலனி சீல் வைக்கப்பட்டுள்ளது. நோய் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியுடன், அங்கு கிருமி நாசினி தெளித்தல் மற்றும் நோய் பரவலை தடுக்கும் பணி நடக்கிறது" என கூறியுள்ளார்.

ஆதித்ய தாக்கரேவின் பதிவின் மூலம் அந்த பகுதிகளில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. எனினும் இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

சீல் வைக்கப்பட்டதை அடுத்து ஒர்லியில் உள்ள 2 பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறவும், புதியவர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story