விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - குமாரசாமி வலியுறுத்தல்


விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் - குமாரசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 March 2020 12:04 AM GMT (Updated: 31 March 2020 12:04 AM GMT)

விவசாயிகளின் விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மிகப்பெரிய போர்

கொரோனா வைரசை ஒழிப்பது என்பது நமது முன் உள்ள மிகப்பெரிய போர். இதற்கு எதிராக போராடுவது என்பது மிக அவசரமானது. ஆனால் போர் நடக்கும்போது நமது மக்களை பாதுகாப்பது முக்கியமானது. 

இதற்கிடையே விவசாயிகளை பாதுகாத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும். மண்டியாவில் விவசாயிகள் சப்போட்டா பழம், சிக்பள்ளாப்பூரில் திராட்சை பழம், சிவமொக்காவில் பால், கோலார், மண்டியாவில் தக்காளியை வீதியில் கொட்டியுள்ளனர்.

இது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினையை வெளிக்காட்டுகிறது. இன்னும் சில நாட்களில் விவசாயிகள் பிரச்சினை மேலும் தீவிரம் அடையும். விவசாயிகளின் விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விவசாயத்துறை பெரும் நெருக்கடியில் சிக்கும்.

தடை விதிக்கக்கூடாது

கிராமங்களில் கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கி குழுக்களை அமைக்க வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களை சிறிய கடைகளுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை வாகனங்களில் எடுத்து செல்லும்போது, அதை சில அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன.

விவசாய விளைபொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கக்கூடாது. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story