டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்: மதுரையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி


டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்: மதுரையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 1 April 2020 3:30 AM IST (Updated: 31 March 2020 11:26 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் 2 பேரும் டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுரை, 

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து மக்கள் கூடுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

தமிழக அரசும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை அண்ணா நகரை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் கடந்த 24-ந்தேதி நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார். இதனைதொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த அவரது உறவினர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட பலரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதில் கட்டிட காண்டிராக்டரின் மனைவி மற்றும் 2 மகன்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதற்கிடையே ராஜபாளையத்தை சேர்ந்த 60 வயது முதியவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவரும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே உறவினர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் அந்த முதியவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட காண்டிராக்டர் குடும்பத்தினர் 3 பேருக்கும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மதுரையைச் சேர்ந்த மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “தற்போது பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 2 பேரும் மதுரை நரிமேடு, தபால்தந்தி நகர் பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவருக்கு 40 வயது, மற்றொருவருக்கு 45 வயது. அவர்கள் 2 பேரும் சமீபத்தில் டெல்லியில் ஒரு அமைப்பின் சார்பில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டு மதுரை திரும்பியவர்கள். இவர்களுடன் அந்த மாநாட்டிற்கு சென்ற மேலும் பலரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப் படுகிறது. மேலும் சிலர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இவர்களது வீட்டின் அருகே உள்ள 20 வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது” என்றனர்.

Next Story