ஊரடங்கினால் தீப்பெட்டி ஆலை பூட்டப்பட்டதால் வீட்டில் இருந்த பெண், சுவர் விழுந்து பலி


ஊரடங்கினால் தீப்பெட்டி ஆலை பூட்டப்பட்டதால் வீட்டில் இருந்த பெண், சுவர் விழுந்து பலி
x
தினத்தந்தி 1 April 2020 2:30 AM IST (Updated: 1 April 2020 2:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே ஊரடங்கு உத்தரவினால் தீப்பெட்டி ஆலை பூட்டப்பட்டதால் வீட்டில் இருந்த பெண், வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

சாத்தூர், 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அம்மாபட்டியில் வசித்து வருபவர் செல்லமுத்து. கூலி தொழிலாளி. அவருடைய மனைவி கற்பகவல்லி (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வேலை செய்து வந்தார். தற்போது ஊரடங்கினால் ஆலை இயங்காமல் பூட்டப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்தார்.

நேற்று காலை செல்லமுத்து வெளியே சென்று விட்டார். 11 மணி அளவில் கற்பகவல்லி தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் அபயகுரல் எழுப்பினார். சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். படுகாயம் அடைந்த கற்பகவல்லியை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கற்பகவல்லிக்கு 8-ம் வகுப்பு படிக்கும் மகனும், 7-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். ஊரடங்கினால் வீட்டில் இருந்த பெண், சுவர் இடிந்து விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story