செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வண்டலூர்,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்குபவர்கள் தவிர அனாவசியமாக சுற்றித்திரிபவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து, நூதன தண்டனையும் வழங்கி வருகின்றனர். ஆனாலும் அதையும் மீறி சிலர் தேவையின்றி சுற்றித்திரிகின்றனர்.
கூடுவாஞ்சேரியில் நேற்று ஒரே நாளில் சாலையில் சுற்றித்திரிந்த 31 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து 30 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்ததாக 706 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 289 மோட்டார் சைக்கிள்கள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 9 ஆட்டோக்கள் உள்பட மொத்தம் 328 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டதாக 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் 78 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 132 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்டம் முழுவதும் இதுவரை 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 654 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.
Related Tags :
Next Story