ஊரடங்கு உத்தரவு: ஆதரவற்றோருக்கு உணவு அளிக்கும் தன்னார்வலர்கள்


ஊரடங்கு உத்தரவு: ஆதரவற்றோருக்கு உணவு அளிக்கும் தன்னார்வலர்கள்
x
தினத்தந்தி 31 March 2020 11:30 PM GMT (Updated: 31 March 2020 10:43 PM GMT)

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆதரவற்றோருக்கு தன்னார்வலர்கள் பலர் உணவு அளித்து வருகிறார்கள்.

ஈரோடு, 

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாநகர் வெறிச்சோடி உள்ளது. எப்போதும் பரபரப்பாக இயங்கும் கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி உள்ளன.

முக்கிய வீதிகள் பலவும் பரந்து விரிந்த மைதானங்கள் போல காட்சி அளிக்கின்றன. அவசர தேவைகளுக்காக வெளியே வரும் மக்கள் தங்கள் கார்கள் அல்லது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தாலும், வழக்கமான ஈரோடு மறைந்து போய் வெறிச்சோடிய வீதிகளே கண்ணுக்கு தெரிகின்றன.

இந்த சூழலில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஆதரவற்ற நிலையில் சாலையோரத்தில் வசிப்பவர்கள், யாசகர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்தான். பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இவர்களுக்கு உணவு கிடைப்பது அரிது. இந்தநிலையை உணர்ந்து ஜீவிதம், அட்சயம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் ஆதரவற்றவர்களை தேடித்தேடி சென்று உணவு வழங்கி வருகிறார்கள். சாலையோர மக்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் மாநகராட்சி தங்கும் இடங்களில் தங்கிக்கொள்ளவும் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்து உள்ளனர்.

அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருவதால், சாலையோர வாசிகள், தனியாக அறைகளில் தங்கி இருக்கும் தொழிலாளர்கள், உணவு சமைக்க கஷ்டப்படும் முதியோர்கள் ஓரளவு பசியாறும் வாய்ப்பு உள்ளது. இங்கும் நீண்ட நேரம் ஒரு வட்டத்துக்குள் அடைப்பட்டு இடைவெளி விட்டு காத்திருந்து சென்று சாப்பிட்டு வருகிறார்கள்.

இதுபோல் இரவு, பகல் பாராமல் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், அவர்களின் தாகம், பசியை போக்கும் வகையிலும் சில தன்னார்வ அமைப்பினர் குளிர்பானம், உணவு ஆகியவையும் வழங்கி வருகிறார்கள். எங்கும் உணவகங்கள், குளிர்பான கடைகள் எதுவும் இல்லாத நிலையில் வெயிலில் பணிசெய்யும் போலீசார் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்கள் தாங்கள் சந்திக்கும் பொதுமக்களிடம் கேட்பது எல்லாம், தயவு செய்து ஊரடங்கு முடியும் வரை வீணாக வெளியில் சுற்றாதீர்கள் என்பதுதான். அதை நிறைவேற்றுவதே அவர்களுக்கு செய்யும் உதவியாக அவர்கள் கருதுகிறார்கள்.

Next Story