கோவில்பட்டியில் காய்கறி மார்க்கெட்டாக மாறிய பள்ளிக்கூடங்கள்


கோவில்பட்டியில் காய்கறி மார்க்கெட்டாக மாறிய பள்ளிக்கூடங்கள்
x
தினத்தந்தி 2 April 2020 3:30 AM IST (Updated: 1 April 2020 11:50 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பள்ளிக்கூடங்கள் தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக மாறி உள்ளன. அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கி சென்றனர்.

கோவில்பட்டி, 

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று வாங்கும் வகையிலும், கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளை தற்காலிகமாக பைபாஸ் ரோடு கூடுதல் பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்தனர். எனினும் அங்கும் காய்கறிகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து பொதுமக்களின் வசதிக்காக மேலும் 2 இடங்களில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடு ஏ.வி. மேல்நிலைப்பள்ளி வளாகம், எட்டயபுரம் ரோடு வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் நேற்று தலா 100 காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை தொடங்கியது.

அங்கு முககவசம் அணிந்து வந்தவர்களை மட்டுமே காய்கறிகள் வாங்க அனுமதித்தனர். அங்கு நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் பொதுமக்கள் கைகளை கை கழுவும் திரவத்தால் நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னர், கடைகளின் முன்பாக சுமார் ஒரு மீட்டர் தூர சமூக இடைவெளியில் வரிசையாக நின்று காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுதேசன் (கிழக்கு), அய்யப்பன் (மேற்கு) மற்றும் போலீசார் கண்காணித்தனர்.

Next Story