கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசுக்கும், போலீசுக்கும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - கனிமொழி எம்.பி. பேட்டி


கொரோனா தடுப்பு நடவடிக்கை: அரசுக்கும், போலீசுக்கும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 2 April 2020 4:30 AM IST (Updated: 1 April 2020 11:50 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் அரசுக்கும், போலீசுக்கும் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி தொகுதி எம்.பி.யும், மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கனிமொழி நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பு சிகிச்சையில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை ஆஸ்பத்திரி டீன் திருவாசகமணியிடம் வழங்கினார். அரசு ஆஸ்பத்திரி முன்பு இயங்கி வரும் அம்மா உணவகத்தையும் பார்வையிட்டார். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு பிரிவுக்கு லிப்ட் வசதி ஏற்படுத்த உடனடியாக நிதி ஒதுக்கப்படும். அதிக மக்கள் நெருக்கடி உள்ள பகுதிகளில் கூடுதலாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, மீனவர்களுக்கு அரசு அறிவித்து உள்ள நிவாரணத்தொகை ரூ.1000 போதுமானது இல்லை. அதனை உயர்த்தி வழங்க வேணடும்.

மக்களை காக்க அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் அரசுக்கும், போலீசுக் கும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார். இந்த ஆய்வின்போது, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக கனிமொழி எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏற்கனவே ரூ.1 கோடி ஒதுக்கி இருந்தார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஆய்வு செய்தபோது, கொரோனா வார்டில் உட்கட்டமைப்புகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யுமாறு டீன் கோரிக்கை விடுத்தார். அதன்பேரில் கனிமொழி எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கூடுதலாக ரூ.50 லட்சத்தை ஒதுக்கீடு செய்து, அதற்கான கடிதத்தை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் வழங்கினார்.

அப்போது, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story