கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது - கலெக்டர் தகவல்


கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவாது - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 April 2020 4:15 AM IST (Updated: 2 April 2020 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் சாப்பிடுவதால் கோவிட்-19 எனும் கொரோனா வைரஸ் பரவாது என திருப்பூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் நுகர்வுகள் தடையின்றி நடைபெறவும் கால்நடை, கோழி, முட்டை, மீன், இறைச்சி மற்றும் கால்நடை தீவனம், கால்நடை தீவனத்திற்கான உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் நுகர்வுகளுக்கும் விலக்கு அளிக்க முதல்-அமைச்சர் அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும் காணொலி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, முதன்மை செயலர் அரசாணைபடி கால்நடை, கோழி , மீன், முட்டை, இறைச்சி மற்றும் கோழி தீவனம், கால்நடை தீவனம் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றின் நுகர்வுகளை அனுமதிக்க அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளையும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது கோழி இறைச்சி மற்றும் முட்டை, இதர கோழி உணவுப்பொருட்கள் சாப்பிடுவதால் கோவிட்19 (கொரோனா) தொற்றுநோய் பரவக்கூடும் என ஒரு தவறான செய்தியினை பொதுமக்களிடம் ஒரு பிரிவினரால் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கோழி, முட்டை இறைச்சி சாப்பிட தயக்கம் காட்டுவதாக தெரியவருகிறது. இது முற்றிலும் தவறான வழி நடத்தும் செய்தியாகும்.

வதந்திகள் மூலம் நமது புரத தேவையினை இழப்பது ஒருபுறம் இருந்தாலும், கோழி வளர்ப்பு, தொழில் மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட கோழி வளர்ப்போரும் விவசாயிகளும் மிகவும் நலிவடைந்து மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு அவர்தம் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்நோய் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு சுவாசக்குழாய் மூலம் தும்மல், சளி போன்றவற்றில் வெளிவரும் நீர்துளிகள் மற்றும் இவைகள் படர்ந்துள்ள பொருட்களை தொடுவதாலும் மட்டுமே பெரும்பாலும் பரவுகிறது.

முட்டை மற்றும் கோழி இறைச்சியானது மிகவும் மலிவான புரத உணவாகும். அவை மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. தற்போதைய சூழல் மனிதனுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் தேவையான காலகட்டமாகும். எனவே, பொதுமக்கள் கோழி முட்டை இறைச்சி உண்பதன் மூலம் கொரோனா பரவியதாக எவ்வித நிகழ்வுகளும் இதுவரை நடைப்பெறவில்லை.

இதுகுறித்த தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. எனவே, தயக்கம் இல்லாமல் அனைவரும் முட்டை மற்றும் கோழி இறைச்சியினை உட்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story