ஆவடி அருகே, 3 வயது குழந்தையின் தலை பானைக்குள் சிக்கியதால் பரபரப்பு - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


ஆவடி அருகே, 3 வயது குழந்தையின் தலை பானைக்குள் சிக்கியதால் பரபரப்பு - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 3 April 2020 4:00 AM IST (Updated: 3 April 2020 1:09 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி அருகே 3 வயது குழந்தையின் தலை பானைக்குள் சிக்கியதை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

ஆவடி, 

ஆவடியை அடுத்த கோவில்பதாகை, அசோக் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், சென்னை பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் திவ்யன் (வயது 3). நேற்று மாலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த திவ்யன், திடீரென வீட்டில் இருந்த சில்வர் பானையை எடுத்து தனது தலையில் மாட்டிக்கொண்டான்.சில்வர் பானைக்குள் அவனது தலை சிக்கிக்கொண்டதால் அவனால் எடுக்க முடியவில்லை. இதனால் அவன் அலறி துடித்தான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த வீட்டில் இருந்த சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பானைக்குள் சிக்கிய திவ்யனின் தலையை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதற்குள் பயத்தில் குழந்தை தொடர்ந்து கதறி அழுதுகொண்ட இருந்தது.

இதனால் பயந்துபோன சீனிவாசன் மற்றும் அங்கிருந்தவர்கள் இதுபற்றி தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ஆவடி தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராகவன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள், சில்வர் பானையில் எண்ணெய்யை தடவி, சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு சில்வர் பானைக்குள் சிக்கிய குழந்தையின் தலையை லாவகமாக வெளியே எடுத்தனர். இதனால் குழந்தை அழுகையை நிறுத்தியது. அதன்பின்னரே சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Next Story